பங்ளாதேஷில் வீசிய சூறாவளி, நாட்டையே சின்னாபின்னமாக்கி விட்டது. கரையோரமிருந்த வீடுகள், படகுகள் அழிந்து உருத்தெரியாமல் காட்சி அளிக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில் சூறாவளியில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று கடலில் மிதந்து கொண்டிருந்த நால்வரின் உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.
இதையடுத்து சூறாவளியில் இறந்த வர்களின் எண்ணிக்கை 28க்குக் கூடியிருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் சூறாவளி வீசுவது வழக்கம். இருந்தாலும் பருவ நிலை மாற்றம் காரணமாக தீவிர மடைந்துள்ள சூறாவளி நாட்டையே புரட்டிப் போட்டுள்ளது.
'சிட்ராங்' சூறாவளி திங்களன்று தெற்கு பங்களதேஷ் கரையைக் கடந்து சென்றது. அதற்கு முன்னதாக ஒரு மில்லியன் பேரை அதிகாரிகள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பியிருந்தனர்.
இதனால் பெரும் அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியதால் அதிக மக்கள் வசித்த தாழ்வான பகுதிகளில் இருந்த ஏராளமான வீடுகள் நாசமடைந்தன.
ஏறக்குறைய 10,000 தகரக் கூரை வீடுகள் சேதமடைந்தது அல்லது அழிந்துவிட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.
பங்ளாதேஷில் பணவீக்கம் தீவிர மடைந்துள்ள நிலையில் விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளன.
குறைந்தது ஐந்து மில்லியன் பேருக்கு இன்னமும் மின்சாரம் கிடைக்கவில்லை என்று கிராமப்புற மின்சாரத் துறை அதிகாரி டெஷிஷ் சக்ராபார்தி தெரிவித்தார்.
சூறாவளியின் மையப்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் டாக்கா வரை மரங்கள் வேரோடு சாய்ந்தன. சூறாவளியோடு கடும் மழையும் பெய்ததால் டாக்கா, குல்னா, பரிசால் போன்ற நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
திங்களன்று பெய்த மழையின் அளவு இதுவரை இல்லாத 324 மில்லி மீட்டரை தொட்டுள்ளது.
இந்த நிலையில் சூறாவளி ஓய்ந்து வழக்கநிலை திரும்புவதால் தாழ்வான இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏறக்குறைய ஒரு மில்லியன் பேர் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.

