மலேசியாவின் கேமரன் மலைப் பகுதியில் நேற்று ஆறு பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த அறுவருக்கும் காயங்கள் ஏற்பட்டன.
அவர்களில் ஒருவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவர்கள் சீரான உடல் நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாகவும் மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
பிரிஞ்சாங் எனும் பகுதியில் உள்ள காட்டில் பிற்பகல் 1 மணியளவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
ஏர்பஸ் ஏஎஸ்355 எஃப்2 ரக ஹெலிகாப்டர், கிளந்தான் மாநிலத்தின் குவா மூசாங்கிலிருந்து பேராக் மாநிலத்தின் தஞ்சோங் ரம்புத்தான் எனும் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்ததாக ஆணையத்தின் தலைமை நிர்வாகி செஸ்டர் வூ தெரிவித்தார்.
ஹெலிகாப்டரில் இருந்தவர்களில் விமானியும் சுகாதார அமைச்சு ஊழியர்கள் என நம்பப்படும் ஐவரும் அடங்குவர் என்று பேராக் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் அஸ்மி ஒஸ்மான் கூறினார்.
ஹெலிகாப்டரில் இருந்த ஆறு பேரும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
பேராக், பாகாங் மாநில எல்லை அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் மூவருக்குக் கடுமையாக காயங்கள் ஏற்பட்டதாக தொடக்கத்தில் நம்பப்பட்டது.
பாகாங் மாநிலத்தில் அமைந்துள்ள குளிர்ச்சியான கேமரன் மலைப் பகுதி பிரபல சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
இங்கு, இயற்கையான சூழலில் காய்கறி, பழங்கள், பூக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

