தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை பெருநகரம் இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமாகி றது. சென்னையின் எல்லை 47 ஆண்டுகளுக்குப்பின் விரிவாக்கப் படுகிறது. தற்போதுள்ள 1,189 சதுர கிலோ மீட்டருடன் கூடுதலாக 4,715 சதுர கி.மீட்டர் பரப்பளவு இணைக்கப்பட்டு 5,904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சென்னை பெறுகிறது. இந்த விவரங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) வெளியிட்டுள்ளது.
விரிவாக்கப்பட்ட சென்னையில், நான்கு மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1,225 கிராமங்களும் கூடுதலாக சேர்ந்துள்ளன. இதனால் சென்னையின் மக்கள் தொகை அளவு 15.9 மில்லியன் (1.59 கோடி) ஆகும்.
இதற்கான அறிவிப்பை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தமிழக சட்ட மன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் இதர பெரிய நகரங்களான பெங்களூரு (8,022 சதுர கிமீ). ஹைதராபாத் (7,100 சதுர கிமீ) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, சென்னை விரிவடைந்த பகுதியாகிறது. இந்தியாவின் தலைநகர் டெல்லி 1,482 சதுர கிமீ, மும்பை 4,355 சதுர கிமீ பரப்பளவுகளையே கொண்டுள்ளன.
சென்னை 1975ஆம் ஆண்டில் 1,189 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது. இந்நகரின் மக்கள் தொகை அதிகரிப்பு, புறநகர் பகுதிகளின் வளர்ச்சி, அடுத்தடுத்த நகரங்களில் தொழில் வளர்ச்சி, அவற்றுடன் சேர்ந்த வீட்டுவசதி வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு, சென்னையின் பரப்பளவை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. 2017-18 நிதியாண்டில் இதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது.
அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தைச் சேர்த்து 8,878 சதுர கிலோ மீட்டருக்கு சென்னை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கடந்தாண்டு நவம்பரில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, உத்தேசிக்கப்பட்ட 8,878 சதுர மீட்டருக்கு பதில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் உள்ள பகுதிகள் என 5,904 சதுர கி.மீட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

