பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து பணவீக்கம் தொடர்ந்து உயரும் சூழ்நிலையில், சிங்கப்பூர் சிரமமான ஆண்டை எதிர்நோக்குகிறது. ஊதிய உயர்வு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம்.
உலகளாவிய விலை ஏற்றம் அண்மைய உச்சத்திலிருந்து இறங்கலாம். ஆனால் சிங்கப்பூரின் பணவீக்கம் வரலாற்று சராசரியைவிட அடுத்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று வெளியிட்ட பொருளியல் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சிங்கப்பூரின் பிரதான மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதிக்கான தேவை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறைந்து வருவதால் 2023ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சி வேகம் மேலும் குறையும்.
சிங்கப்பூர் பொருளியல் மந்தநிலை அபாயத்தை உடனடியான எதிர்நோக்காது என்றாலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பொருளியல்கள் நீண்டகால சரிவைக் கண்டால் மந்தநிலை ஏற்படலாம்.
நாணய ஆணையம் கருத்துப்படி ஆக மோசமான சூழ்நிலையில், இப்போதைக்கு அமெரிக்கா முழு ஆண்டு நீடிக்கக்கூடிய பொருளியல் மந்தநிலையைத் தவிர்க்கும்.
அந்நிலையில், 2022ல் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 விழுக்காடு முதல் 4 விழுக்காடு வரை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டில் இது குறைந்து, 3 விழுக்காடாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், குறைந்து வரும் வெளிநாட்டுத் தேவை உலகளாவிய மின்னணுவியல் துறையை வீழ்ச்சியின் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளது.
ஏற்றுமதியால் உந்தப்படும் சிங்கப்பூரின் உற்பத்தித் துறையின் பெரும்பகுதி மின்னணுவியல் துறையாக உள்ளது.
முதல் இரு இடங்களில் இருக்கும் சிங்கப்பூரின் இறுதித் தேவைச் சந்தை களான சந்தைகளான சீனாவிலும் அமெரிக்காவிலும் மின்னணு சாதனங்களுக்கான பயனீட்டாளர் தேவை குறைந்துள்ளது.
இது அண்மைய மாதங்களில் சிங்கப்பூரின் மின்னணு ஏற்றுமதியைத் பாதித்தது என்று ஆணையம் கூறியது.
இதற்கிடையில், உள்நாட்டு பகுதி மின்கடத்தி தொழில்துறையும் அதிகரிக்கும் எரிசக்தி செலவினால் திண்டாடுவதாகவும் அது குறிப்பிட்டது.
புதிய பணிப்புகளும் (ஆர்டர்) ஏற்றுமதியும் செப்டம்பரில் மேலும் குறைந்ததால், மின்னணு கொள்முதல் மேலாளர்குறியீடு தொடர்ந்து இரண்டாவது மாதமாக சுருங்கியது.
உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பு, முக்கிய மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் உயர்வு காரணமாக ஏற்பட்ட சிரமமான நிதி நிலைமைகள் காரணமாக நிதித் துறையின் வளர்ச்சி வாய்ப்பு களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.
மெதுவடையும் பொருளியல் வேலைவாய்ப்பு வளர்ச்சியைப் பாதிக்கும். எனினும், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், குடியிருப்பாளர் ஊதிய உயர்வு கொவிட்-19க்கு முன்பிருந்த விகித்தைவிட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது வணிகச் செலவுகளை அதிகரிக்கும், பணவீக்கத்தை அதிகமாக்கக்கூடும்.
படிப்படியான சம்பள உயர்வு முறை விரிவாக்கங்கள், பொதுச் சேவைத் துறை, சுகாதாரம், கல்வித் துறைகளில் ஊழியர்களைத் தக்கவைக்க அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வுகள் முதலியன காரணமாக குடியிருப்பாளர் ஊதியம் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் உயரலாம்.
எனினும், மிதமான உலகளாவிய வளர்ச்சியும் இறுக்கமான நிதியியல் நிலைமைகளும் ஊழியர் தேவையைப் பாதிக்கலாம். முக்கியமாக வெளிப்புறம் சார்ந்த உற்பத்தித் துறை மற்றும் நிபுணத்துவம், நிதித்துறை, தகவல்தொடர்புப் பணிகளை உள்ளடக்கும் நவீன சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அறிக்கை குறிப்பிட்டது.
மத்திய வங்கி பணவீக்கம் தொடர்பான அதன் அண்மைய பணவீக்க முன்னுரைப்பை மாற்றவில்லை.
தங்குமிடம், தனியார் போக்குவரத்துச் செலவுகள் தவிர்த்த மூலாதாரப் பணவீக்கம் இவ்வாண்டில் சராசரியாக ஏறத்தாழ 4 விழுக்காடாகவும் ஒட்டுமொத்தப் பணவீக்கம் ஏறத்தாழ 6 விழுக்காடாகவும் இருக்கும்.
வரும் 2023 முழுவதற்கும், ஜனவரி மாதத்தில் நடப்புக்கு வரவுள்ள பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு உட்பட அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மூலாதாரப் பணவீக்கம் சராசரியாக 3.5 விழுக்காடு முதல் 4.5 விழுக்காடு வரை இருக்கும் என முன்னுரைக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டின் மூலாதாரப் பணவீக்கம் சராசரியாக 5.5% முதல் 6.5% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி உயர்வின் விளைவுகளைத் தவிர்த்து, மூலாதாரப் பணவீக்கம் 2.5% முதல் 3.5% வரை இருக்கலாம். ஒட்டுமொத்தப் பணவீக்கம் 4.5 விழுக்காட்டிலிருந்து 5.5 விழுக்காட்டுக்குள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2021 ஜூன் மாதத்திற்கும் 2022 ஜூன் மாதத்திற்கும் இடையில் நிலவிய மூலாதாரப் பணவீக்கத்திற்கு எரிபொருள், வேளாண்மைப் பொருள் விலை உயர்வே முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

