உலகின் இரு பெரும் வல்லரசுகளான சீனாவுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் (படங்கள்) தெரிவித்து உள்ளனர்.
இருநாடுகளும் இணைந்து செயல்படுவது உலகத்திற்கு நன்மை பயக்கும் என்று புதன்கிழமை இருவரும் செய்தி வெளியிட்டனர்.
எனினும் இரு தலைவர்களின் செய்திக் குறிப்பில் உள்ள வாசகத்திற்கு மாறாக, இருநாட்டு அதிகாரிகளும் கருத்துரைத்து எச்சரித்து வருகின்றனர். இதனால், இரு நாடுகளுக்கிடையேயான பதற்றநிலை, குறிப்பாக தைவான் தொடர்பாக, வெடித்து விடாமல் இருப்பது சிரம மான காரியம் என்று கூறப்படுகிறது.
தைவான் விஷயத்தில் இன்றைய நிலை நீடிப்பதை சீனா ஏற்கவில்லை. மேலும், தைவானை தனது அதிகாரத்துக்குள் கொண்டுவர கால நிலையை சீனா வேகப்படுத்தி வருகிறது.
சீனாவுடனான ஒத்துழைப்பை நாடும் அதேநேரத்தில், அந்நாட்டுடன் உலக அளவில் போட்டிபோடு வதிலும் அமெரிக்கா முனைப்பாக உள்ளது.
"புதிய சகாப்தத்தில் பரஸ்பர மரியாதை, அமைதி பேணி இருநாடுகளும் செயல்படுவது, இரு தரப்புக்கும் பயன்தரும் வகையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றுக்குகொன்று ஒத்துப்போக சரியான வழியைக் கண்டறிய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது," என்று திரு ஸி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க்கில் நடந்த லாப நோக்கமற்ற அமைப்பான அமெரிக்க - சீனா உறவுகள் தொடர்பான தேசிய குழுவின் (என்சியுஎஸ்ஆர்) ஆண்டு விருந்தில் இந்தச் செய்தி வாசிக்கப்பட்டது.
அதே விருந்தில் வாசிக்கப்பட்ட திரு பைடனின் செய்தி, பருவநிலை நெருக்கடியைச் சமாளிப்பது, உலகெங்கிலும் சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இரு வல்லரசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சுட்டியது.
எனினும், சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான, வளமான உலகை உருவாக்கும் தன் இலக்கை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் உலகளவில் அதன் போட்டித்தன்மையை உயர்த்துவதில் முதலீடு செய்யும் என்றும் பைடனின்செய்தி குறிப்பிட்டது.
சீனாவுடன் அமெரிக்கா மோதலை நாடவில்லை என்பதை, முன்னதாக அதேநாளில் தனது உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களுடன் நடந்த சந்திப்பிலும் திரு பைடன் கூறினார்.
"நாம் நமது ராணுவ அனுகூலத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் மோதலைத் நாடுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். கடுமையான போட்டி இருக்கும். ஆனால் மோதல் தேவையில்லை," என்றார் அவர்.

