சிங்கப்பூர் ஆயுதப் படையின் நான்காவது படையாக நேற்று மின்னிலக்க, உளவுத்துறைப் படை (டிஐஎஸ்) தொடங்கப்பட்டது. உளவுப்பணியை உடனுக்குடன் மேற்கொண்டு இணையத் தாக்குதல்கள் மற்றும் மின்னியல் போர்முறை உள்ளடக்கிய மின்னிலக்க மிரட்டல்களுக்கு எதிராக நாட்டைப் பாதுகாக்க இப்படை செயல்படும்.
'தளபத்தியங்கள்' எனக் குறிப்பிடப்படும் நான்கு பிரதான பிரிவுகளை 'டிஐஎஸ்' கொண்டிருக்கும். 'C4' எனப்படும் தளபத்தியம், கட்டுப்பாடு, தகவல்தொடர்பு, கணினிகள் ஆகியவற்றுடன் இணையம், மின்னியல் பாதுகாப்பு, உளவியல் தற்காப்பு, பயிற்சியளித்தல் ஆகிய உளவுத்துறை தொடர்பான அம்சங்களையும் இப்பிரிவுகள் கையாளும். அரசாங்க அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்துறை நிபுணர்கள் மற்றும் ராணுவம், கடற்படை, ஆகாயப்படையில் உள்ளது போன்ற ஒரு சேவை தலைமையகத்துடன் மின்னிலக்க நிபுணத்துவத் திறனை வளர்த்துக்கொள்ளும் சிறப்பு நிலையமும் இருக்கும்.
இந்நிலையில் மின்னிலக்க, தகவல் தளங்களில் பாதுகாப்பு மிரட்டல்களுக்கு எதிராக சிங்கப்பூர் ஆயுதப் படையின் 'டிஐஎஸ்' அமைக்கப்படுவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அது அவசியம் என்றும் அதிபர் ஹலிமா யாக்கோப் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஜூரோங்கின் 'சாஃப்டி' ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் ஆயுதப்படையின் நான்காவது படையின் தொடக்க அணிவகுப்பில், மின்னிலக்க, உளவுத்துறைப் படையின் முதலாவது தலைவராக பிரிகேடியர் ஜெனரல் லீ யி-ஜின்னை நியமித்தார் அதிபர் ஹலிமா. அணிவகுப்பில் நான்காவது படையின் சின்னமும் கொடியும் வெளியிடப்பட்டன.
"நாட்டின் ஆகாயம், நிலம், கடல் ஆகியவற்றை சிங்கப்பூர் ஆயுதப்படை தற்காப்பது போலவே மின்னிலக்கத் தளத்தில் ஏற்படக்கூடிய தாக்குதல்களுக்கு எதிராக நம்மைத் தற்காத்துக்கொள்ளும் திறன்களை இந்த நான்காவது படை நமக்கு வழங்கும்," என்றார் அதிபர்.
தற்காப்பு அமைச்சு முதன்முதலாக அதன் நிறுவன அமைப்பை வெளியிட்ட நிலையில், 'டிஐஎஸ்' என்ற நான்காவது படையில் கூட்டு உளவுத்துறைத் தளபத்தியம், 'C4' தளபத்தியம்/இணையப் பாதுகாப்பு பணிக்குழு, மின்னிலக்கத் தற்காப்பு தளபத்தியம், 'டிஐஎஸ்' பயிற்சி தளபத்தியம் மற்றும் மின்னிலக்க செயல்பாட்டு தொழில்நுட்ப நிலையம் ஆகியவை உள்ளடங்கும்.
இது குறித்து கடந்த புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மின்னிலக்க, உளவுத்துறைப் படையின் செயல்பாட்டு அலுவலகத் தலைவர் கர்னல் லட்சுமணன் நாராயணன், "ராணுவ நிபுணர்கள் திட்டத்திலுள்ள தொழில்முறை ராணுவ வீரர்கள் இந்தப் புதிய படையில் அங்கம் வகிப்பார்கள்," என்றார்.
மேலும், தற்காப்பு நிர்வாக அதிகாரிகள், திறமையான முழுநேர தேசிய சேவையாளர்கள் போன்றோரும் சேர்க்கப்படுவர் என்றார்.

