பிலிப்பீன்சில் 'நல்கி' புயலால் பல மாகாணங்களில் நிலச்சரிவும் திடீர் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. மார்பு வரையிலான நீரில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்க, உயிரிழந்தவர் எண்ணிக்கை குறைந்தது 31 ஆக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 'டத்து பிளா சின்சுவாட்' பகுதியிலிருந்து பத்து சடலங்களும் அருகிலுள்ள 'டத்து ஒடின் சின்சுவாட்'டிலிருந்து மேலும் 16 சடலங்களும் 'உப்பி' பகுதியிலிருந்து ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பங்காமோரோ வட்டார அரசாங்கத்தின் பேச்சாளரும் குடிமைத் தற்காப்புத் தலைவருமான திரு நகுயிப் சினாரிம்போ தெரிவித்துள்ளார்.
பலரும் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. சிலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. கடும் வெள்ளத்தால் கோட்டாபாட்டோ சிட்டியின் 90% கிராமங்களும் 67,000க்கு மேற்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று திரு சினாரிம்போ தெரிவித்தார்.
"கோட்டாபாட்டோவில் நான் வசித்த இத்தனை காலத்தில் வெள்ள நீர் என் வீட்டுக்குள் வந்தது இதுவே முதல் முறை. இம்முறை நிலைமை மிகவும் மோசமாக உள்ளது," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
2022ல் பிலிப்பீன்சை தாக்கி உள்ள 16வது சூறாவளி 'நல்கி'. தற்போது 115 கிமீ வேகத்தில் பிலிப்பீன்ஸ் கடலின் மேல் கிழக்குக் கரையோரத்தில் சுழலும் 'நல்கி' புயல், இந்த வார இறுதியில் மேலும் இரண்டு முறை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடல் பயணங்களை பிலிப்பீன்ஸ் கரையோரக் காவல் படை ரத்து செய்துள்ளதால் தற்போது ஆயிரக்கணக்கானோர் வெவ்வேறு துறைமுகங்களில் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இதற்கிடையே, மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

