அமெரிக்க நாடாளுமன்ற நாயகரின் கணவரை சுத்தியலால் தாக்கிய ஆடவர் கைது

அமெரிக்க நாடாளுமன்ற நாயகரின் கணவரை சுத்தியலால் தாக்கிய ஆடவர் கைது

2 mins read
a47c6b19-e5b4-4a36-b481-f0d04df142b4
திருவாட்டி நேன்சி பெலோசியின் சான் ஃபிரான்சிஸ்கோ வீட்டிற்கு வெளியே விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரிகள். படம்: இபிஏ -
multi-img1 of 2

அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசியின் வீட்டிற்குள் புகுந்து அவருடைய கணவரை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 28) அதிகாலை சுத்தியலால் தாக்கிய 42 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

கலிஃபோர்னியா மாநிலம், சான் ஃபிரான்சிஸ்கோவில் திருவாட்டி பெலோசியின் வீடு உள்ளது. அவரது மூன்று மாடி வீட்டை உடைத்துக்கொண்டு புகுந்த சந்தேக ஆடவர், "நேன்சி எங்கே?" என்று உரத்த குரலில் கேட்டார்.

எனினும், திருவாட்டி பெலோசி, 82, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் இருந்தார். அவருடன் பாதுகாவலர்கள் இருந்தனர். ஆனால், அவருடைய கணவர் பால் பெலோசி, 82, சான் ஃபிரான்சிஸ்கோ இல்லத்தில் இருந்தார்.

திரு பெலோசிக்கும் டேவிட் டெபாய்ப்பே எனும் அந்த ஆடவருக்கும் இடையே சுத்தியலைக் கைப்பற்றுவதில் போராட்டம் ஏற்பட்டது. ஆனால் திரு பெலோசியிடமிருந்து ஒருவழியாக சுத்தியலைப் பலவந்தமாக பிடுங்கிய டேவிட், அவரைத் தாக்கினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், டேவிட்டை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். திரு பெலோசியையும் டேவிட்டையும் காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேவிட் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று சான் ஃபிரான்சிஸ்கோ காவல்துறைத் தலைவர் வில்லியம் ஸ்காட் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் திரு பெலோசிக்கு மண்டையோட்டில் முறிவும் அவரது வலது கையில் கடுமையான காயமும் ஏற்பட்டன. அதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற நாயகர் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். திரு பெலோசி முழுமையாகக் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் கண்டனம்

இதற்கிடையே, திரு பெலோசி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திருவாட்டி பெலோசிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 8ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில், அரசியல் வன்முறை குறித்த கவலை எழுந்துள்ளது.