அடுத்த ஆண்டு முதல் அரசாங்க ஆதரவுடன் இயங்கும் பாலர் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளது. அதோடு, 2024ஆம் ஆண்டுக்குள் அத்தகைய ஐந்து பாலர் பள்ளி அமைப்புகளின் பள்ளிகளில் கூடுதலான பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள மேலும் 22,000 இடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஆதரவு பாலர் பள்ளிகளில் கட்டணம் குறைக்கப்படுவதால் ஏறக்குறைய 100,000 சிங்கப்பூர் பிள்ளைகள் பலனடைவர் என்று பாலர் கல்வி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
மேலும், அடுத்த ஈராண்டுகளில் அரசாங்க ஆதரவு பாலர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளமும் 10லிருந்து 30 விழுக்காடு உயர்த்தப்படும். சிறப்பாகப் பணியாற்றுவோரின் சம்பளம் கூடுதலாக உயர்த்தப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் கூறினார்.
சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற பாலர் கல்வி கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் திரு மசகோஸ் பேசினார்.
மாற்றங்களைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டுக்குள் அவர்களது அனுபவம், திறன், வேலை செயல்திறன்களைப் பொறுத்து பாலர் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் கிட்டத்தட்ட 2,900லிருந்து 6,000 வெள்ளி வரை உயரும்.
அதோடு, பாலர் பள்ளி ஆசிரியர்களின் வேலைச் சூழலை மேம்படுத்துவது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதன் தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர், பாலர் பள்ளிகளை நடத்துவோர் ஆகியோருடன் வரும் மாதங்களில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
சனிக்கிழமைகளில் பாலர் பள்ளிகள் இயங்காமல் இருப்பது போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
2025ஆம் ஆண்டுக்குள் 80 விழுக்காடு பாலர் பள்ளி மாணவர்களை அரசாங்க ஆதரவு பாலர் பள்ளிகளில் இடம்பெறச் செய்வது சிங்கப்பூரின் இலக்கு. 2019ஆம் ஆண்டு தேசிய தினஙப பேரணி உரையில் அந்த இலக்கு குறித்து அறிவிக்கப்பட்டது.
அதைக் கருத்தில்கொண்டு அரசாங்க ஆதரவு பாலர் பள்ளிகளில் கூடுதலாக 22,000 இடங்கள் அமைக்கப்படவுள்ளன.
தற்போது 60 விழுக்காடு சிறுவர்கள் அரசாங்க ஆதரவு பாலர் பள்ளிகளில் பயில்வதாக பாலர் பள்ளி மேம்பாட்டு அமைப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
மற்ற சிறுவர்கள் தனியார் பாலர் பள்ளிகளில் பயில்கின்றனர். தற்போது மொத்தமாக எல்லா தனியார் பாலர் பள்ளிகளிலும் சுமார் 200,000 இடங்கள் உள்ளன.
அரசாங்க ஆதரவு பாலர் பள்ளிகளில் கூடுதலாக உருவாக்கப்படும் இடங்களில் 2,800 இடங்கள் கைக்குழந்தைப் பராமரிப்புக்கு ஒதுக்கப்படும், 4,400 இடங்கள் 'பிளேகுரூப்' எனும் பாலர் கல்வி விளையாட்டுக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த இருவகை சேவைகளுக்கும் தேவை அதிகம் இருப்பதாக அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார். குறிப்பாக அதிகமான இளம் குடும்பங்கள் வசிக்கும் புதிய வட்டாரங்களில் இவற்றுக்கான கூடுதல் இடங்கள் இடம்பெறும் என்பதை அவர் குறிப்பிட்டார்.
பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ், மை ஃபர்ஸ்ட் ஸ்கூல், எம்.வை வோர்ல்ட், ஸ்கூல்4கிட்ஸ், இ-பிரிட்ஜ் ஆகியவற்றின் பாலர் பள்ளிகளில் அடுத்த ஈராண்டுகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.
இவை 'ஏங்கர் ஆப்பரேட்டர்ஸ்' என்றழைக்கப்படும் அரசாங்க ஆதரவில் பாலர் பள்ளிகளை இயக்கும் முதன்மை நடத்துநர் அமைப்புகள்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் அரசாங்க ஆதரவு பாலர் பள்ளிகளில் பெற்றோர் பிள்ளைகளுக்கு செலுத்தவேண்டிய அதிகபட்சக் கட்டணமும் குறைக்கப்படும். அரசாங்க ஆதரவு முதன்மை நடத்துநர் அமைப்புகள், அரசாங்கப் பங்காளி நிறுவனங்கள் ஆகியவற்றின் பள்ளிகளுக்கு இது பொறுந்தும்.
சிங்கப்பூரில் தற்போது ஐந்து முதன்மை நடத்துநர் அமைப்புகளும் 29 அரசாங்கப் பங்காளி அமைப்புகளும் இயங்குகின்றன.
"மொத்தத்தில் இந்நடவடிக்கைகள் குடும்பங்களுக்கு ஆதரவான ஒரு சூழலை உருவாக்கப் பங்களிக்கின்றன. தங்களின் பிள்ளைகளுக்குக் கட்டுப்படியான கட்டணத்தில் தரமான பாலர் கல்வி வழங்கப்படுவதைக் குடும்பங்களால் உறுதிப்படுத்தவும் முடியும்," என்பதை திரு மசகோஸ் சுட்டினார்.
அரசாங்க ஆதரவுடன் இயங்கும் பாலர் பள்ளிகளில் புதிய அனுகூலங்கள்; 10% - 30% சம்பள உயர்வு

