சுத்தியலால் தாக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவரால் 82 வயது திரு பெலோசி நேற்று முன்தினம் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியதாகச் சந்தேதிக்கப்படும் ஆடவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தாக்குதலில் மண்டை உடைந்ததால் திரு பெலோசி அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக திருவாட்டி நேன்சி பெலோசியின் அலுவலகம் தெரிவித்தது. திரு பெலோசியின் கை, கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் அலுவலகம் குறிப்பிட்டது.
அவர் முழுமையாக குணமடைவார் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திரு பெலோசியைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள டேவிட் டிபாப் எனும் ஆடவர் 'நேன்சி எங்கே?' என்று ஆங்கிலத்தில் கத்திக்கொண்டு திருவாட்டி பெலோசியைத் தேடியதாகச் சொல்லப்படுகிறது.
அரசாங்கம், பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிரான பதிவுகளைக் கொண்ட ஆதாரம் இல்லாத வலதுசாரி கருத்துகளைப் பரப்பும் வலைப்பதிவுகளுடன் அவர் தொடர்புடையவர் என்றும் கருதப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.
இன்னும் சில நாள்களில் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் அந்நாட்டில் அரசியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்த அச்சம் நிலவுகிறது.
இந்தத் தாக்குதலை அரசியல் வன்முறைச் செயல் என்று வகைப்படுத்தி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்ற அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் மாற்றியமைக்கப்பட்டன என்ற பொய்த் தகவலைப் பரப்பும் சிலர் அரசியல் சூழலை மோசமாக்கி வன்முறையைத் தூண்டுவதாகச் சொன்ன திரு பைடன், அத்தகையோரைக் கடுமையாகச் சாடினார்.

