கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தின்போது சிங்கப்பூரர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவினர். உதவி தேவைப்படுவோருக்கு உதவவேண்டும் என்ற மனப்பான்மை சிங்கப்பூரர்களின் மனத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அதையே அந்தச் செயல்கள் வெளிப்படுத்துவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று கூறினார்.
மக்களின் அறப்பணி உணர்வை வளர்க்க மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இதைக் கருத்தில்கொண்டே மக்கள் கழகம் அடுத்த மாதம் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தப்போவதாக அவர் அறிவித்தார். மேலும், பல நல்ல சமூகக் காரணங்களுக்காக தங்களுக்குப் பிடித்தவகையில் தொண்டூழியங்களில் ஈடுபட அந்தத் திட்டம் மக்களுக்கு ஊக்கமூட்டும்.
'சமூகத் தொண்டூழியர்' என்ற அத்திட்டத்தில் கலந்துகொண்டு சொந்தமாக தொண்டூழியத் திட்டங்களை மக்கள் தொடங்கலாம். அதற்கான செலவை ஈடுசெய்யும் வகையில் 1,000 வெள்ளி வரை மதிப்புள்ள மானியம் அத்திட்டத்திற்கு வழங்கப்படும்.
தொண்டூழியர்களுடன் சேர்ந்து செயல்பட்டு சமூகத் தேவைகளைக் கண்டறிந்து ஏற்புடைய அமைப்புகளுடன் தொண்டூழியர்களை மக்கள் கழகம் சேர்க்கும். சொந்தத் திட்டங்களைத் தொடங்க விரும்பாதவர்கள், நடப்பில் இருக்கும் தொண்டூழிய வாய்ப்புகளை மக்கள் கழகம் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
'அவர் தெம்பனிஸ் ஹப்' மையத்தில் நேற்று நடந்த மக்கள் கழக வருடாந்திர சமூக ஆய்வரங்கில் துணைப் பிரதமர் வோங் உரையாற்றினார். சிங்கப்பூரர்களில் பலரும் சமூகத்திற்குத் தொண்டாற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் சிலர் சாதாரண முறையில் தொண்டாற்ற விரும்புகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய உதவி மனப்பான்மையுடன் கூடிய சிங்கப்பூரர்களில் மேலும் பலரைக் கவர்ந்து இழுத்து அவர்களைச் சமூகத்தில் ஈடுபட வைக்க முடியும் என்று திரு வோங் குறிப்பிட்டார். அதற்கு வகைசெய்ய தற்போைதய அடித்தள அமைப்புகளையும் தாண்டி மக்கள் கழகம் பல்வேறு தளங்களை ஏற்படுத்தித் தரலாம் என்றும் அவர் ெசான்னார்.
இதற்கிடையே, அந்த ஆய்வரங்கில் பேசிய மக்கள் கழக துணைத் தலைவர் எட்வின் டோங், புதிய மானியத் திட்டம் மக்கள் சமூகத்திற்குத் தொண்டாற்றுவதற்கான வழிகளைப் பெருக்கும் என்று தெரிவித்தார். நடைமுறைச் செலவுகளை ஈடுசெய்ய 1,000 வெள்ளி வரை மதிப்புள்ள புதிய மானியம் உதவும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சருமான திரு டோங் கூறினார்.
ஆய்வரங்கையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டோங், புதிய தொண்டூழியத் திட்டத்திற்கான மொத்த மானியத் தொகை பற்றி எதையும் குறிப்பிடவில்லை.
இருந்தாலும் மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் பணம் செலவிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொண்டூழியத் திட்ட மானியத்தைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதனதன் அடிப்படையில் மதிப்பிடப்படும். குடிமக்களின் ஈடுபாட்டை வலுப்படுத்தும் பணியை நிறைவேற்ற நல்ல நிலையில் மக்கள் கழகம் இருக்கிறது என்று துணைப் பிரதமர் வோங் கூறினார்.

