நான்காம் தலைமுறைத் தலைவர்களின் (4ஜி) அமைச்சர்நிலை தொகுதிச் சுற்றுலா கொவிட்-19 காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக இடம்பெறவில்லை. அது நேற்று மீண்டும் தொடங்கியது.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், இயோ சூ காங்கில் சுற்றுலா மேற்கொண்டார். "மக்கள் செயல் கட்சியின் 4ஜி தலைவர்கள் இரு வாரங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் இந்தச் சுற்றுலாக்களை வார முடிவு நாள்களில் மேற்கொள்வர்.
"கூடுமானவரை அவர்கள் பல தொகுதிகளுக்கும் செல்ல திட்டம் இருக்கிறது," என்று ஊடகத்திடம் பேசிய திரு வோங் குறிப்பிட்டார்.
இந்தச் சுற்றுலாக்கள் 2023 செப்டம்பர் வரை இடம்பெறும். வரும் டிசம்பரில் அவை இடம்பெறமாட்டா. பெரும்பாலான தொகுதிகளில் சுற்றுலாக்கள் இடம்பெறும் என்று மக்கள் கழகம் கூறியது.
இருந்தாலும் தொகுதிகளைப் பற்றியோ அவற்றின் துல்லியமான எண்ணிக்கையைப் பற்றியோ அது விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
அமைச்சர்நிலை தொகுதிச் சுற்றுலாக்கள் எதிர்த்தரப்பு வசம் உள்ள தொகுதிகளிலும் இடம்பெறும் என்று ஊடகத்தின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
திரு வோங்குடன் இயோ சூ காங் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹான் வெங்கும் நேற்றைய சுற்றுலாவில் கலந்துகொண்டார்.
"முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.
"அடுத்த ஆண்டு செப்டம்பருக்கு பிறகும் இந்தச் சுற்றுலாக்களைத் தொடர திட்டமுள்ளது," என்று துணைப் பிரதமர் கூறினார்.
இப்போதைய சுற்றுலாக்கள், முந்திய சுற்றுலாக்களில் இருந்து வேறுபட்டு இருக்கும். இப்போதைய சுற்றுலாக்களில் முன்னேறும் சிங்கப்பூர் இயக்கம் பற்றி குடியிருப்பாளர்களிடம் விவரித்து கூறப்பட்டு அவர்களின் யோசனைகள் நாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னேறும் சிங்கப்பூர் என்ற செயல்திட்டத்தைக் கடந்த ஜூன் மாதம் அரசாங்கம் தொடங்கியது.
கூடுமானவரை குடிமக்களை அதிகமாக ஈடுபடுத்தி, அவர்களுக்கு மிகவும் நாட்டமான பலதரப்பட்ட கொள்கைகள் தொடர்பில் அவர்களுடைய கருத்துகள், யோசனைகளைப் பெறுவதற்கு அதிக முயற்சிகள் இடம்பெறும்.
புதிய சுற்றுலாக்கள் அடித்தள அமைப்புகளுக்கு அப்பாலும் விரிவடைந்து சமூகப் பங்காளிகளையும் மற்றவர்களையும் ஈடுபடுத்தும் என்றும் அவர் கூறினார்.

