தென்கொரியாவில் சோகம்; சிங்கப்பூர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இரங்கல்
தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை இரவு நேரத்தில் சந்துப் பகுதி ஒன்றில் நடந்த பேய்விழா நிகழ்வின்போது (ஹாலோவீன்) கூட்ட நெரிசலில் முட்டிமோதி ஒருவர் மீது ஒருவர் விழுந்து அடிபட்டு மிதிபட்டதில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆகியது என்று நேற்று அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாண்டவர்களில் பெரும்பா லானவர்கள் பதின்ம வயது இளை ஞர்கள். ஈரான், உஸ்பெகிஸ்தான், சீனா, நார்வே நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 22 பேரும் அவர்களில் அடங்குவர்.
சோல் நகரின் ஈட்டேவான் என்ற பகுதியில் நடந்த சோக சம்பவத்தில் 82 பேர் காயமடைந்து இருக்கிறார்கள் என்று சாய் சுங்-பியோம் என்ற தீயணைப்புத் துறை அதிகாரி கூறினார்.
காயமடைந்தவர்களில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்று அவசர சிகிச்சைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூன்று ஆண்டுகளில் முதன்முறையாக இந்த விழா சனிக்கிழமை நடந்தது. அதில் கலந்துகொண்ட பலரும் முகக்கவசங்களையும் பேய்விழா உடைகளையும் அணிந்திருந்தனர்.
குறுகிய சந்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கூட்டம் பெருகி கண்டபடி பலரும் தாறுமாறாகவும் மூர்க்கமாகவும் நடந்துகொண்டதாக நேரில் பார்த்த ஒரு சிலர் கூறினர். இதனிடையே, அந்தச் சோக சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்தச் சம்பவத்தைக் கேள்விபட்டுத் தான் மிகவும் அதிர்ச்சி, கவலையடைந்துவிட்டதாக சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்தார்.
பிரதமர் லீ சியன் லூங்கும் தென்கொரிய அதிபருக்குக் கடிதம் எழுதி தனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
சிங்கப்பூரர் யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. வெளியுறவு அமைச்சு அணுக்கமாக சூழ்நிலையைக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

