சிங்கப்பூர் குடியரசு தற்காப்புப் படையின் இரண்டாவது தலைவராகப் பொறுப்பேற்றிருந்த பிரிகேடியர் ஜெனரல் (பிஜி) கிர்பா ராம் விஜ் கடந்த சனிக்கிழமை தமது 87வது வயதில் காலமானார்.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பிறகு தொடக்க ஆண்டுகளில் நாட்டின் ராணுவத்தைக் கட்டமைப்பதில் இவர் முக்கியப் பணியாற்றினார். இவருக்கு மனைவி, மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
குடும்பத்தினர் சூழ்ந்திருக்க அமைதியான முறையில் பிஜி கிர்பா மரணமடைந்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.
பிஜி கிர்பா சிங்கப்பூரின் தற்காப்புப் படைத் தலைமை இயக்கு நராகப் பொறுப்பு வகித்தார். இந்தப் பதவி, இப்போதைய தற்காப்புப் படைத் தலைவர் பதவிக்கு ஏறக் குறைய ஒப்பான முந்தைய பதவியாகும்.
பிஜி கிர்பா 1970 முதல் 1974 வரை அந்தப் பதவியை வகித்தார். அவருக்குமுன் அந்தப் பதவியை வகித்து வந்த பிஜி டி.ஜே.டி. கேம்ப்பெல் 1989ல் மரணமடைந்தார்.
சிங்கப்பூரின் ஆயுதப் படையை உருவாக்குவதில் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்த பிஜி கிர்பாவை இப்போதைய, முன்னாள் தற்காப்புப் படைத் தலைவர்கள் பெரிதும் பாராட்டினர்.
பிரிட்டிஷ் இந்தியாவில் 1935ல் பிறந்த பிஜி கிர்பா, இந்தியாவின் பிரிவினையைத் தொடர்ந்து 1947க்கு பிறகு சிங்கப்பூரில் குடியேறினார்.
பிஜி கிர்பாவின் குடும்பத்திற்கு தற்காப்பு அமைச்சு நேற்று தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தது. அவரின் நல்லுடல் இன்று எரியூட்டப்படும்.

