சிங்கப்பூரில் சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இன்று முதல் கடுமையாகின்றன. அந்தச் சட்டங்கள் வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான சிங்கப்பூரின் அரணையும் ஆற்றலையும் பலப்படுத்தும்.
இணையத்தில் இடம்பெறக்கூடிய பாதக கருத்துகளைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் ஆற்றலும் மேம்படும்.
சமய அமைப்புகளின் தலைமைத்துவப் பதவிகளை சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள் வகிக்கிறார்கள் என்பதை இன்று முதல் சமய அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.
வெளிநாட்டு நபர்களுடன் அல்லது அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு இருந்தால் அது பற்றியும் அந்த அமைப்புகள் தெரியப்படுத்தவேண்டும்.
சமய நல்லிணக்கத்திற்கு மிரட்டலாக விளங்கக்கூடிய எந்தவொரு நபருக்கும் எதிராக அரசாங்கம் பிறப்பிக்கக்கூடிய கட்டுப்பாட்டு உத்தரவுகளும் விரிவுபடுத்தப்படும். அந்த உத்தரவுகள் இணையத் தகவல் தொடர்புகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவடையும்.
இத்தகைய உத்தரவுகள் முன்பு நடப்பில் இருந்த 14 நாள் அறிவிப்புக் காலத்திற்குப் பதிலாக உடனடியாகவே நடப்புக்கு வரும்.
சமய நல்லிணக்கம் தொடர்பிலான இப்போதைய தண்டனை விதித்தொகுப்பின்கீழ் வரும் குற்றச்செயல்கள், இனிமேல் சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று நடப்புக்கு வரும் கடுமையான சட்டங்கள் சமய நல்லிணக்கத்தைப் பராமரிப்பதில் இடம்பெறக்கூடிய முயற்சிகளைப் பலப்படுத்தும்.
அத்தகைய முயற்சிகளில் இன்னும் சிறப்பான ஒருமித்த கவனம் செலுத்தவும் அவை வழிவகுக்கும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.
சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் 2019ல் திருத்தப்பட்டது.
அதேவேளையில், சிங்கப்பூரின் குற்றவியல் சட்டம் சென்ற ஆண்டு செப்டம்பரில் திருத்தப்பட்டது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், இந்தச் சட்டம் சமயம் மற்றும் சமயம் சாராத அமைப்புகளைப் பாதுகாப்பதாகத் திரும்பத் திரும்பத் தெரிவித்து வந்திருக்கிறார்.
ஒரு சமய அமைப்பு, சமயத்தைப் பயன்படுத்தி சமயம் சாராத ஓரினப் புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் (எல்ஜிபிடி) அங்கம் வகிக்கும் அமைப்பை அல்லது தனிநபர்களைத் தாக்கினால் சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
அதுபோலவே, ஒரு சமய அமைப்பு அல்லது அதனுடைய உறுப்பினர் சமயம் சாராத நபரால் அல்லது அமைப்பால் தாக்கப்படும்போது குற்றம் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்தச் சட்டம் பொதுவான ஒன்று என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத்தைக் கீழறுத்து அமைதிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமய அமைப்புகள் அந்நிய ஆதிக்கத்தின்கீழ் வந்திருப்பதாகக் கருதப்படும் பட்சத்தில், அந்த அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்க இன்று முதல் நடப்புக்கு வரும் சட்டம் வகைசெய்கிறது.
ஒரு குற்றச் செயல் சமய ரீதியில் அல்லது தீவிர மனப்போக்கு அடிப்படையில் நடந்திருக்குமானால், குற்றவாளிக்கு தண்டனையை இரண்டு மடங்கு வரை அதிகரிக்கும் அதிகாரத்தை இன்று முதல் நடப்புக்கு வரும் சட்டம் நீதிமன்றங்களுக்கு வழங்கும்.

