சிங்கப்பூரில் உணவு விநியோக ஊழியர்களின் நிலை பற்றி ஆய்வு தரும் தகவல்
சிங்கப்பூரில் உணவு விநியோக ஊழியர்களாக வேலை பார்ப்போரின் நிலை என்ன என்பது பற்றி கொள்கை ஆய்வுக் கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி பல தகவல்களைத் தெரிவித்துள்ளது.
அத்தகைய ஊழியர்களில் 10 பேரில் ஏழு பேர் உணவு விநியோக வேலை மூலம் மாதம் $3,000க்கும் குறைவாகவே சம்பாதிப்பதாகக் கூறியுள்ளனர்.
அவர்களின் சராசரி மாதச் சம்பளம் $1,925 ஆக இருக்கிறது. இது, சென்ற ஆண்டின் தேசிய சராசரி மாதச் சம்பளமான $4,680ல் பாதிகூட இல்லை.
அதேவேளையில், தாங்கள் வாரம் 44 மணி நேரம் வேலை பார்ப்பதாக 10 பேரில் ஏறக்குறைய நால்வர் கூறுகிறார்கள். வேலை நியமன சட்டத்தின்கீழ், பரிந்துரைக்கப்படும் கூடினபட்ச வேலை நேரம் இதுவே ஆகும்.
வேலையை நிறுத்தினால் கொஞ்ச காலத்திற்குத் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் போதிய அளவுக்குச் சேமிப்பு இருப்பதாகக் கூறியவர்கள் நான்கில் ஒருவர்தான்.
கொள்கை ஆய்வுக் கழகம் 1,002 உணவு விநியோக ஊழியர்களை உள்ளடக்கி நடத்திய ஆய்வு மூலம் இந்த விவரங்கள் தெரியவந்து இருக்கின்றன.
ஊழியர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் தாங்கள் விபத்தில் சிக்கி இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய இத்தகைய ஊழியர்களுக்குப் பரந்த அடிப்படையிலான சமூகப் பாதுகாப்புகள் தேவை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியவந்து இருக்கிறது என ஆய்வை நடத்திய வல்லுநர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தகைய சமூகப் பாதுகாப்பில் கட்டாய மத்திய சேம நிதிச் சந்தாவும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
உணவு விநியோக ஊழியர்களில் 10ல் ஏழு பேர் இத்தகைய கூடுதல் பாதுகாப்புகளைப் பெறுவதைவிட கையில் ரொக்கமாக அதிகம் பெறுவதையே விரும்புவதாக ஆய்வில் கூறினர்.
சேம நிதிச் சந்தா வேண்டும் என்பவர்கள், வேண்டாம் என்பவர்கள் ஏறக்குறைய சரிசமம்.
ஆய்வு இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் நடத்தப்பட்டது.
உணவு விநியோகத் தொழில் மூலம் தங்கள் மாத வருவாயில் குறைந்தபட்சம் கால்பகுதியைச் சம்பாதிக்கின்ற ஊழியர்கள் மட்டுமே ஆய்வில் உள்ளடக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
கொள்கை ஆய்வுக் கழகத்தின் சமூக ஆய்வுக்கூடத் தலை வர் டாக்டர் மேத்யூ மேத்யூஸ் ஆய்வுக்குத் தலைமை தாங்கினார். சொந்த வருவாயைப் பொறுத்தவரை, உணவு விநியோகத்தொழில் வேலையை மட்டுமே தாங்கள் முற்றிலும் சார்ந்திருப்பதாக ஏறக்குறைய 46 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
உணவு விநியோகத் தொழிலை மட்டும் செய்து மாதம் ஒன்றுக்கு $5,000க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்று கூறியவர்கள் 3.2 விழுக்காட்டினர் மட்டுமே.
இதற்குக் கணிசமான அளவுக்கு முயற்சி வேண்டும், துணிச்சல் வேண்டும் என்று அவர்கள் கூறியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு விநியோகத் தொழில்துறையில் ஊழியராகச் சேர்வோர் தேவையைவிட அதிகமான அளவுக்கு இருந்து வருகிறார்கள் என்பதால் போதிய அளவுக்கு பணத்தை ஈட்ட முடியாது என்று தங்களுக்கு கவலை ஏற்பட்டுவிட்டதாக 10 பேரில் சுமார் ஏழு பேர் தெரிவிக்கிறார்கள்.
உணவு விநியோக ஊழியர்களில் சுமார் பாதிப்பேர் வாரம் 39 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே தாங்கள் வேலை பார்ப்பதாகக் கூறினர்.
தாங்கள் முதலில் இந்த வேலையைத் தொடங்கியது முதல் ஒரு வாரம்கூட ஓய்வு எடுத்ததில்லை என்று கூறியவர்கள் ஏறக்குறைய பாதிப்பேராக இருந்தனர்.
10 பேரில் ஆறு பேர் தங்கள் வருவாய் பற்றி மனநிறைவு தெரி வித்தனர். இதர துறைகளில் வேலை கிடைத்தால் இந்த வேலையை விட்டுவிட்டு கூடிய விரைவில் மற்ற வேலைகளுக்கு போய்விடத் தயாராக இருப்பதாக ஐவரில் சுமார் இருவர் கூறினர்.
குறைந்த வருவாயைத் தரக்கூடிய வேலைகளைத் திருத்தி வடிவமைப்பதன் தொடர்பிலான சிந்தனைகள் அதிகரிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கண்ணியமான ஊதியம் கிடைப்பதோடு கற்றுக்கொண்டு முன்னேறுவதற்கான கவர்ச்சிகரமான நிலவரங்களும் வாய்ப்புகளும் இருக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

