செங்காங்கில் உள்ள 190A- ரிவர்வேல் டிரைவ் முகவரியில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
அதில் சம்பந்தப்பட்டு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அந்த ஆடவரின் 31 வயது மகள் நேற்று கைது செய்யப்பட்டார். காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் இது பற்றிய தகவல்களைத் தெரிவித்தன.
உதவிக்கு வரும்படி இது பற்றி தங்களுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 5.30 மணிக்குத் தகவல் வந்ததாக அவை கூறின. அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அந்தப் புளோக்கில் இருக்கும் அடுக்குமாடி வீடு ஒன்றின் உள்ளே 67 வயது முதியவர் ஒருவர் உடலில் பல இடங்களில் காயம் அடைந்த நிலையில் அசைவின்றி கிடந்ததை அதிகாரிகள் பார்த்ததாக காவல்துறை தெரிவித்தது.
அந்த ஆடவர் இறந்துவிட்டார் என்று குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். அதையடுத்து அதிகாரிகள் அந்த மாதைக் கைது செய்தனர்.
இதனிடையே, சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு நேற்றுக் காலை சுமார் 9 மணிக்குத் தான் சென்றதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. அப்போது ஐந்து காவல்துறை அதிகாரிகள் அங்கு இருந்தனர்.
மூன்று கார்களும் தடயவியல் வாகனமும் அந்த புளோக் அருகே நிறுத்திவைக்கப்பட்டு இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
துப்புரவாளர்கள் மூன்று பேரின் உதவியுடன் அந்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் அந்தப் புளோக்கின் கீழ்ப்பகுதியில் இருக்கும் குழாய்க் குப்பைத்தொட்டியில் கிடந்த குப்பைகளை ஆராய்ந்துகொண்டிருந்தனர்.
இதனிடையே, காலையில் வழக்கம்போல் நடப்பதற்குத் தான் வெளியே வந்தபோது காவல்துறை அதிகாரிகளைக் கண்டதாக அங்கு குடியிருக்கும் 60 வயதைத் தாண்டிய ஒருவர் கூறினார்.
மூன்று மணி நேரத்திற்கும் அதிக நேரம் காவல்துறை அதிகாரிகள் குப்பைத் தொட்டிகளை ஆராய்ந்தபடியே இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். அந்தப் புளோக்கின் 15வது மாடி வீடு ஒன்றை காவல்துறை சுற்றி அடைத்தது. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் காவல்துறை அதிகாரிகள் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
திருவாட்டி லலிதா சிவலிங்கம், திருவாட்டி வேதாம்பாள் கந்தசாமி என்ற இரண்டு மாதர்களும் கடந்த 23 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார்கள்.
மாண்டுவிட்ட ஆடவரின் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். பத்து ஆண்டுகளுக்கு முன் அந்த ஆடவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் என்று அந்த மாதர்கள் தெரிவித்தனர்.
கணவன்-மனைவி இருவரும் அமைதியானவர்கள். அவர்களைப் பார்க்க யாராவது எப்போதாவது வருவதுண்டு என்று திருவாட்டி லலிதா கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள மாது மீது இன்று நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சுமத்தப்படும்.
குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உண்டு.
விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

