சிங்கப்பூரை மக்கள் செயல் கட்சி தொடர்ந்து ஆட்சி செய்யும் வேண்டும் என பல சிங்கப்பூரர்கள் விரும்புகின்றனர். அதே சமயம், கூடுதல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதையும் அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், இந்த இரண்டுமே சிங்கப்பூரர்கள் எதிர்பார்க்க முடியாது என பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற மக்கள் செயல் கட்சி(மசெக) மாநாட்டில் திரு லீ பேசினார். மாநாட்டில் 3,000க்கும் அதிகமான கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். புதிய அரசாங்கத்துக்கு கிடைக்கும் ஆதரவு பொறுத்தே கொள்கைகள், நாட்டு நடப்பு முடிவுகள் எடுக்கப்படும் என அவர் சொன்னார். சிங்கப்பூரை பாதுகாப்பாக வழிநடத்தவும், முக்கியமான முடிவுகளை எடுக்கவும் அரசாங்கத்துக்குப் பெரும்பாலான ஆதரவு கிடைப்பது முக்கியம் என கட்சியின் தலைமைச் செயலளாரான திரு லீ குறிப்பிட்டார்.
கிருமித் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த கட்டாயம் முகக்கவசம் அணிவது, எல்லைகள் மூடப்பட்டது, தடுப்பூசி போடுவது போன்ற நடைமுறைகளை அரசாங்கம் கொண்டுவந்தது. அரசாங்கத்தின்மீது மக்கள் கொண்டுள்ள முழு நம்பிக்கையின் அடிப்படையில் இவை சாத்தியமானதாக திரு லீ சொன்னார்.
கடந்த 2020 பொதுத் தேர்தலில் மசெக 61.2 விழுக்காடு பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. ஒருவேளை, அது 51 விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால், பல சிறந்த அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழக்க நேரிட்டிருக்கும் என பிரதமர் கூறினார். இதனால், தலைமைத்துவம் வலுவிழந்திருக்கும் எனக் குறிப்பிட்ட திரு லீ, கொவிட்-19 கிருமித் தொற்றை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட முடிவுகளும் மாறுபட்டிருக்கும் என்று எடுத்துக்கூறினார்.
அரசியல் போரில் வெற்றி பெறுவதற்கு கட்சி செய்ய வேண்டிய மூன்று முக்கிய காரியங்களை திரு லீ குறிப்பிட்டார்.
மசெக தலைவர்கள் சிங்கப்பூக்கு நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும் என்று தாங்கள் நம்பும் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் கைக்கொள்ளக்கூடிய திட்டவட்டமான, உறுதியுடன் கூடிய அரசியல்வாதிகள் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் கட்சியின் அரசியல் தகவல்கள் இருக்க வேண்டும்.
எதிர்த்தரப்பு முயற்சிகளை முறியடித்து எதிர்த்தரப்பகளின் அவர்களின் பலவீனங்களை வாக்காளர்களுக்கு மசெக வெளிப்படுத்த வேண்டும்.
மூன்றாவதாக, மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிளை செயல் வீரர்களும் அடித்தள நிலையில் பாடுபட்டு கட்சி குடியிருப்பாளர்களுக்காக எப்படி எப்படியெல்லாம் பாடுபடுகிறது என்பதை விளக்க வேண்டும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
கட்சி புதுப்பித்தல் குறித்து, அடுத்த பொதுத் தேர்தலில் களமிறக்க சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். "அடுத்த பொதுத் தேர்தலில், திறமைமிக்க, பல துறைகளைச் சேர்ந்த, பல இன வேட்பாளர்கள் போட்டியிடுவர். சிங்கப்பூரர்களுடன் ஒன்றுபட்டு, நாட்டை அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி அவர்கள் எடுத்துச்செல்வர் என நான் நம்பிக்கையாக இருக்கிறேன்," என்று பிரதமர் கூறினார்.

