இழந்த தொகுதிகளைக் கைப்பற்ற மசெக பாடுபடும்: துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்

1 mins read
7c9572d6-995c-473a-bf51-db306f776250
மக்கள் செயல் கட்சி மாநாட்டில் முதன்முறையாக உரையாற்றினார் பிரதமர் லாரன்ஸ் வோங் (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (மசெக) வென்றுவிடும் என்ற உத்தரவாதம் கிடையாது. அதோடு தாம்தான் அடுத்த பிரதமர் என்பதும் நிச்சயமற்றது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இதனால், கடந்த பொதுத் தேர்தலில் இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற மசெக மூன்று மடங்கு கடுமையாக உழைக்கும் என்று திரு வோங் சொன்னார். பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் அரசாங்கத்தை அமைக்க, சிங்கப்பூரர்களின் ஆதரவைப் பெற கட்சி போராடும் என அவர் குறிப்பிட்டார். மசெக மாநாட்டில் முதன்முறையாக உரையாற்றிய திரு வோங் இவ்வாறு சொன்னார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல்களில் போட்டி சூடுபிடிக்கும் என்று கூறிய திரு வோங், கட்சி உறுப்பினர்களை கடுமையான, நிச்சயமற்ற தேர்தல் களங்களுக்குத் தயாராகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி ஆறு தொகுதிகளில் வென்றது. அந்த ஆறு தொகுதிகளிலும் அக்கட்சி வென்ற வாக்குகள் மசெக-விற்கு கிடைத்த வாக்குகளைவிட சற்று அதிகம் என்று திரு வோங் சுட்டிக்காட்டினார்.

1959லிருந்து மசெக சிங்கப்பூரை ஆட்சிசெய்து வந்துள்ளது. எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், மசெக-வே அரசாங்கம் அமைக்கும் என பலர் கருதக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட உத்தரவாதம் கிடையாது என்றார் திரு வோங்.

எந்தக் கட்சி அரசாங்கம் அமைக்கும் என்ற அடிப்படையிலேயே இனிவரும் அனைத்து பொதுத் தேர்தல்களும் அமையும் என்று திரு வோங் சொன்னார்.