மசெகவின் புதிய மத்திய செயற்குழு

2 mins read
6a9d6054-fddf-44fd-aca6-f67a510141a5
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கட்சி மாநாட்டில் மத்திய செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

மக்கள் செயல் கட்சி (மசெக) உறுப்பினர்கள் அதன் புதிய மத்திய செயற்குழுவை தேர்ந்தெடுத்துள்ளனர். அச்செயற்குழு கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முதன்மை அமைப்பாகும்.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கட்சி மாநாடு ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் இன்று நடைபெற்றது. அதில் 3,000க்கும் அதிகமான கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அதில் மக்கள் செயல் கட்சியின் 37வது மத்திய செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

எந்த ஒரு வரிசைப்படியும் இல்லாமல், அச்செயற்குழுவில் பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமர்கள் லாரன்ஸ் வோங், ஹெங் சுவீ கியட், சான் சுன் சிங், மசகோஸ் ஸுல்கிஃப்லி, கிரேஸ் ஃபூ, டெஸ்மண்ட் லீ, இந்திராணி ராஜா, ஓங் யீ காங், டான் சுவான்-ஜின், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

ரகசிய வாக்கெடுப்பின் மூலம் 12 பேர் செயற்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோர் 13வது, 14வதாக அதிக வாக்குகள் பெற்றதை அடுத்து மசெகவின் மத்திய செயற்குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

36வது மத்திய செயற்குழுவில் கட்சி தலைவராகப் பதவி வகித்த வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், மத்திய செயற்குழு தேர்தலில் இம்முறை போட்டியிடவில்லை.

திரு கான் 2018ஆம் ஆண்டிலிருந்து மசெகவின் கட்சித் தலைவராக இருந்துள்ளார். முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் மசெக கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, திரு கான் அப்பொறுப்பை ஏற்றார்.