மக்கள் செயல் கட்சி தொடர்ந்து ஆட்சி புரிய வேண்டும். அதேவேளையில், அரசாங்கத்தை விடாமல் நெருக்கும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவேண்டும் என்ற ஒரு நிலை சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை சாத்தியமற்றது என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
"மசெக பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. அது நற்பணியைச் செய்து வருகிறது. அதைவிட வேறு யாரும் சிறந்த முறையில் செயல்பட முடியாது என்பதால் பல சிங்கப்பூரர்களும் அந்தக் கட்சியே தொடர்ந்து ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
"தேர்தலில் வலுவான அல்லது பலவீனமான ஆதரவைப் பெற்றாலும் மசெக ஆட்சியைப் பிடித்து ஆற்றலுடன் செயல்படும் என்று முற்றிலும் எதிர்பார்த்து சிங்கப்பூரர்கள் எதிர்த்தரப்புக்கு வாக்களிக்கிறார்கள்.
"ஆனால், இது இரண்டுமே சாத்தியப்படாது. அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவு கிடைப்பதற்கும் பலவீனமான ஆதரவு கிடைப்பதற்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது," என திரு லீ விளக்கினார்.
மக்கள் செயல் கட்சி மாநாடு மற்றும் விருது விழா 2022ல் கலந்துகொண்ட 3,000க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள், செயல்வீரர்களிடையே பிரதமர் உரையாற்றினார்.
"பொதுத் தேர்தலில் வலுவான ஆதரவு கிடைத்தால் அரசாங்கத்திற்குக் கடுமையான முடிவுகளை எடுப்பதற்கான ஆதரவும் நம்பிக்கையும் கிடைக்கும்.
"அதன் மூலம் ஏற்ற, இறக்கங்களைச் சமாளித்து சிங்கப்பூருக்கு வழிகாட்டி அதைப் பாதுகாப்பாக முன்னேற்றிக் கொண்டுசெல்ல முடியும்," என்று மசெக வின் தலைமைச் செயலாளருமான திரு லீ குறிப்பிட்டார்.
கடந்த 2020 பொதுத் தேர்தலில் மசெக 61.2% வாக்குகளைப் பெற்றது. இதற்குப் பதிலாக அந்தத் தேர்தலில் 51% வாக்குகளுடன் கட்சி நூலிழை பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருந்தால் அப்போதும்கூட மசெக அரசாங்கம்தான் அமைந்திருக்கும்.
சிங்கப்பூரை முடிந்த அளவுக்குச் சிறப்பாக, செம்மையாக கட்சி ஆட்சி புரிந்திருக்கும். ஆனால், பல நல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் கட்சி இழந்திருக்கும். கட்சியின் தலைமைத்துவக் குழு கணிசமான அளவுக்குப் பலவீனம் அடைந்திருக்கும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்த்தரப்பு அதிக இடங்களில் வெற்றி பெறும் பட்சத்தில் எந்தக் கட்சி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்பதை தீர்மானிக்கக்கூடிய நிலைக்குப் பொதுத் தேர்தல் வந்துவிடும் என்பதை அவர் சுட்டினார். கடந்த பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி 10 இடங்களில் வென்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த பற்பல ஆண்டுகளாக மசெக தன் கொள்கைகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வந்திருக்கிறது. ஆனால், அது போதாது. தன் செயல்திறனை வாக்குகளாக மாற்றுவதற்கான மக்களின் அங்கீகாரத்தை அது பெற வேண்டிய தேவை இருக்கிறது என்பதை திரு லீ வலியுறுத்திக் கூறினார்.
அரசியல் போரில் வெற்றி பெற கட்சி செய்ய வேண்டிய மூன்று முக்கிய காரியங்களைத் திரு லீ குறிப்பிட்டார்.
மசெக தலைவர்கள், சிங்கப்பூருக்கு நீண்டகாலப் போக்கில் நன்மை பயக்கும் என்று தாங்கள் நம்பும் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் கைக்கொள்ளக்கூடிய திட்டவட்டமான, உறுதியுடன் கூடிய அரசியல்வாதிகள் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் கட்சியின் அரசியல் தகவல்கள் இடம்பெற வேண்டும்;
எதிர்த்தரப்பு முயற்சிகளை முறியடித்து எதிர்த்தரப்புகளின் பலவீனங்களை வாக்காளர்களுக்கு மசெக வெளிப்படுத்த வேண்டும்;
மூன்றாவதாக, மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிளைச் செயல்வீரர்களும் அடித்தள நிலையில் பாடுபட்டு குடியிருப்பாளர்களுக்காக கட்சி எப்படி எப்படியெல்லாம் பாடுபடுகிறது என்பதை விளக்க வேண்டும் என்றார் திரு லீ.
சிங்கப்பூரின் அரசியல் தவறாகப் போகுமானால் அதன் ஆட்சிமுறையும் தவறாகிவிடும். விளைவாக சிங்கப்பூரர் அனைவரின் வாழ்வும் பாதிக்கப்பட்டுவிடும் என திரு லீ எச்சரித்தார்.
கட்சி புதுப்பிப்பு பற்றி கருத்துக் கூறிய திரு லீ, அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய ஆற்றல்மிக்க வேட்பாளர்கள் சிலரை கட்சி ஏற்கெனவே அடையாளம் கண்டுகொண்டுள்ளது என்றும் மேலும் பலர் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் கூறினார்.
"அடுத்த பொதுத் தேர்தலில் ஆற்றல்மிகு, பன்மயம் மிகுந்த, பிரதிநிதித்துவம் மிக்க வேட்பாளர்கள் குழுவை மீண்டும் களமிறக்க முடியும். அத்தகைய வேட்பாளர்களில் அனுபவசாலிகளும் புதியவர்களும் இருப்பார்கள்.
"வாக்காளர்களுடன் சேர்ந்து பாடுபட்டு சிங்கப்பூரை முன்னோக்கிக் கொண்டுசெல்ல அவர்கள் ஆயத்தமாக இருப்பார்கள் என நம்புகிறேன்," என்று பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.
இதனிடையே, மசெக மாநாட்டையொட்டி தமிழ் முரசிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், பொருளியல், பணவீக்கம் அடிப்படையில் அடுத்த ஐந்து ஆண்டுகள் சவால்மிக்க ஆண்டுகளாக இருக்கும் என்றார்.
மக்களுக்கு உதவ பல்வேறு திட்டங்களை மசெக அரசாங்கம் செயல்படுத்தி உள்ளது. தொடர்ந்து அதிக உதவியை வழங்க அது தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
கூடுதல் செய்தி: இர்ஷாத் முகம்மது
மேலும் செய்தி பக்கம் 2ல்

