மாலத் தீவில் நிகழ்ந்த மோசமான தீ விபத்தில் ஒன்பது இந்திய ஊழியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விடுமுறை உல்லாசத் தளமான தலைநகர் மாலேயில் வியாழன் இரவு வெளிநாட்டு ஊழியர்கள் நெரிசலாகத் தங்கியிருந்த விடுதியில் தீ மூண்டது.
சேதமடைந்த கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து பத்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கீழ்த்தளத்தில் இருந்த வாகன பழுதுபார்க்கும் இடத்தில் தீ மூண்டதாக நம்பப் படுகிறது.
"இதுவரை பத்து உடல்களை கண்டுபிடித்துள்ளோம்," என்று தீ அணைப்புச் சேவை அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
நான்கு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இறந்தவர்களில் ஒன்பது பேர் இந்தியர்கள், மற்றவர் பங்ளாதேஷ் நாட்டவர்.
இதற்கிடையே வெளிநாட்டு ஊழியர்களின் மோசமான நிலையை மாலத்தீவின் பல்வேறு அரசியல் கட்சிகள் குறைகூறியுள்ளன.
தலைநகர் மாலேயின் 250,000 மக்கள் தொகையில் பாதி பேர் வெளிநாட்டவர்கள் என நம்பப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலோர் பங்ளாதேஷ், இந்தியா, நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள்.
கொவிட்-19 தொற்று காலத்தின்போது அவர்களின் மோசமான வாழ்க்கைச் சூழல் வெளிச்சத்துக்கு வந்தது.
அப்போது, உள்ளூர் மக்களை விட வெளிநாட்டு ஊழியர்களிடையே தொற்று மூன்று மடங்கு வேகத்தில் பரவியது.