சிங்கப்பூர், இந்தியாவின் பேநவ், யுபிஐ விரைவு மின்கட்டண முறைகள் அடுத்த சில மாதங்களில் இணைக்கப்படும் என்று சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பெரியசாமி குமரன் கூறியுள்ளார்.
பேநவ், யுபிஐ மின்கட்டணமுறைகளுக்கு இடையிலான இணைப்பு குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு பயன்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளும் இடையே உடனடியாகவும் குறைந்த கட்டணத்திலும் கைபேசிவழி தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றிவிட முடியும்.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் இந்திய மத்திய வங்கியும் மின்கட்டண முறைகளை இணைக்கும் திட்டத்தை 2021 செப்டம்பரில் அறிவித்தன.
2022 ஜூலைக்குள் திட்டம் நிறைவுபெறும் என்று அவை அப்போது கூறியிருந்தன.
தற்போது இரு நாடுகளும் தங்கள் மின்கட்டணமுறைகளை இணைப்பதற்கான தொழில்நுட்ப ஆயுத்தங்களை முடித்துள்ளதாக இந்தியத் தூதர் கூறினார்.
அடுத்த சில மாதங்களில் அத்திட்டம் நிறைவுபெறும் என்றும் அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அது பற்றி அறிவிப்பார் என்றும் திரு குமரன் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள இந்திய ஊழியர்கள் சொந்த நாட்டுக்குப் பணம் அனுப்பும்போது, இங்குள்ள வங்கிகளும் பணமாற்று நிறுவனங்களும் சுமார் 10 விழுக்காட்டைக் கட்டணமாக வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தியாவின் யுபிஐ கட்டணமுறையை தங்கள் நாட்டு மின்கட்டண முறைகளுடன் இணைத்துள்ளன.
அதே போல பிலிப்பீன்சும் இந்தியாவும் மின்கட்டண முறைத் தொடர்புகளை உண்டாக்கச் செயல்பட்டு வருகின்றன.

