பத்து நாடுகளைக்கொண்ட ஆசியான் அமைப்பு தன்னுடைய 11வது உறுப்பினராக தீமோர் லெஸ்தேவை சேர்த்துக்கொள்ள கொள்கை அளவில் இணங்கி இருக்கிறது. ஆசியான் இதனைத் தெரிவித்தது.
ஆசியானின் உயர்நிலைக் கூட்டங்களில் கவனிப்பாளராக அந்தத் தீவு நாடு அனுமதிக்கப்படும் என்று நோம்பென் நகரில் நடக்கும் உச்சநிலை மாநாட்டில் இடம்பெற்ற ஆசியான் தலைவர்கள் சந்திப்பிற்குப் பிறகு அறிவிக்கப்பட்டது.
"தீமோர் லெஸ்தேவை 11வது உறுப்பினராக ஏற்றுக்கொள்ள கொள்கை அளவில் இணக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
"முழு உறுப்பினராக அந்த நாட்டை ஆக்கு வதற்கான வழிகாட்டித் திட்டம் அடுத்த ஆண்டின் உச்சநிலை மாநாட்டில் தாக்கல் செய்யப்படும்," என்று ஆசியான் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீமோர் லெஸ்தே இந்தோனீசியாவின் பிடியில் இருந்து வந்தது. ஐநா மேற்பார்வையில் 1999ல் பொதுமக்கள் கருத்தெடுப்பு நடத்தப்பட்டது. தீமோர் லெஸ்தே சுதந்திரத்திற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர்.
அதனைத் தொடர்ந்து 2002ல் ஐநா அதிகாரபூர்வமாக தீமோர் லெஸ்தேவை ஒரு நாடாக அங்கீகரித்தது. இயற்கை வளங்கள் அதிகம் உள்ள நாடான தீமோர்-லெஸ்தேவில் 1.3 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள்.
அந்த நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே ஆசியானில் சேர்வதற்கான நடைமுறைகளைத் தொடங்கியது. 2011ல்தான் முறைப்படி அது விண்ணப்பித்தது.

