இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ள எஞ்சிய ஆறு குற்றவாளிகளையும் விடுதலை செய்யும்படி இந்திய உச்ச நீதின்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் பேரறிவாளன் என்பவரை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே விடுதலை செய்தது.
முப்பது ஆண்டுகளுக்கும் அதிக கால சிறைவாசம், நன்னடத்தை, அனுமதியின் பேரில் வெளியே வந்த காலத்தில் விதிகளை மீறாமல் நடந்துகொண்டது ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, அரசியல் சாசனத்தின் 142வது பிரிவின்கீழ் தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றம் அவர்களை விடுலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் நேற்று விடுதலையான ஆறு பேர் ஆவர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
பிறகு மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதியானது.
நளினிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை 2000ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையும் ரத்து செய்யப்பட்டு 2014ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
பின்னர் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதேநேரத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவெடுத்தது.
ஆனால், அந்தத் தீர்மானத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்த்ததால் பிரச்சினை தலைதூக்கியது.
பிறகு கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது.
தாங்களும் அதேநிலையில் உள்ளதால், தங்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டு இதர ஆறு பேரும் நீதிமன்றத்தை அணுகினர்.
தங்களை விடுதலை செய்யும் வரை தங்களுக்கு இடைக்காலப் பிணை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டனர்.
இதை ஏற்று அவர்களை விடு தலை செய்த நீதிமன்றம், பேரறிவாளனைப் போலவே இந்த ஆறு பேரும் உரிய நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.


