வேகமான பணப் பரிவர்த்தனை களுக்கான தங்களுடைய ஏற்பாடுகளை இணைப்பதற்குத் தோதாக தொழில்நுட்ப ஆயத்தப் பணிகளை இந்தியாவும் சிங்கப்பூரும் வெற்றிகரமாக முடித்துள்ளன.
இந்த ஏற்பாடுகள் மூலம் யுபிஐ என்ற இந்தியாவின் பட்டுவாடா முறைக்கும் பேநவ் என்ற சிங்கப்பூரின் பட்டுவாடா முறைக்கும் இடையில் பணப் பரிவர்த்தனைகளை உடனுக்குடன் கண் இமைக் கும் நேரத்தில் மிகவும் வசதியாக பாதுகாப்பாக நடத்தி முடிக்கலாம்.
இந்த இரண்டு பரிவர்த்தனை செயலிகளையும் இணைக்கும் திட்டத்தை இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் சிங்கப்பூரின் மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணை யமும் உருவாக்கி வருகின்றன. இது மிக விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"சிங்கப்பூர் தன்னுடைய பேநவ் முறையை இந்தியாவின் யுபிஐ முறையுடன் இணைக்க விரும்புகிறது. இந்தத் திட்டம் அடுத்த சில மாதங்களில் பூர்த்தியாகும்.
"நடைமுறைக்கு வரும்போது சிங்கப்பூரில் இருக்கும் யாரும் இந்தியாவில் இருக்கும் தங்களுடைய குடும்பத்துக்கு நேரடியாக பணத்தை அனுப்ப முடியும்," என்று சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பி. குமரன் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் பற்றி இந்தியப் பிரதமர் விரைவில் அறிவிப்பு விடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று திரு குமரன் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்கள், சிறு தொகையை தன் குடும்பத்திற்கு அனுப்ப விரும்பினாலும் எந்தச் செலவுமின்றி அதை வசதியாக, பாதுகாப்பாகச் செய்துமுடிக்க இந்த ஏற்பாடு உதவும் என்று அவர் கூறினார்.
யுபிஐ-பேநவ் இணைப்பு ஏற்பாட்டின் மூலம் செலவு இராது என்பதால் குறிப்பாக இது வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும்.
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடைப்பட்ட உத்தேச இணைப்பின் வழி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கைப்பேசியைப் பயன்படுத்தி பணம் அனுப்பலாம். அதேபோல, சிங்கப்பூரில் இருந்து யுபிஐ செயலியைப் பயன்படுத்தி பணம் அனுப்பலாம் எனத் தெரி கிறது. இந்தத் திட்டம் பற்றி முதன்முதலாக 2021 செப்டம்பரில் அறி விக்கப்பட்டது.

