தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளில் நெரிசலைக் குறைக்க பல்வேறு திட்டங்கள்

2 mins read
5550d2f6-780f-426b-9838-41594822d8c7
அக்டோபர் 15ஆம் தேதி உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் உடனான மலேசியாவின் இரு தரைவழி எல்லைகளில் வாகனங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மலேசிய அரசாங்க சிறப்புக் குழு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் வான் அகமது டாலன் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

மலேசிய மோட்டார்சைக்கிளோட்டிகளுக்காக 25 தானியக்க குடிநுழைவு முறையைச் சேர்ப்பதும் இந்தத் திட்டங்களில் அடங்கும். கேலாங் பாத்தா குடிநுழைவு, சோதனைச்சாவடியில் உள்ள பேருந்து முனையத்தில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதும் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு வரும் வாகனங்களுக்காக 'ஆர்எஃப்ஐடி' முறையைப் பயன்படுத்தி சுங்கக் கட்டணங்களைச் செலுத்துவது குறித்து ஆராய்வதும் இத்திட்டங்களில் அடங்கும்.

மலேசியப் பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 19ஆம் தேதி இடம்பெறும் வாக்களிப்பு நாளில் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு வரும் வாகனங்களால் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, குடிநுழைவுத் துறை கடந்த வாரம் ஏற்பாடு ஒன்றைச் செய்திருந்தது.

கேலாங் பாத்தா சோதனைச்சாவடியில் உள்ள 48 வாகனத் தடங்களில், குறைந்தது 12 தடங்கள் ஜோகூரிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சிங்கப்பூரிலிருந்து வரும் வாகனங்களுக்காக அந்தத் தடங்களை உடனடியாக மாற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் உட்லண்ட்சில் உள்ள காஸ்வே கடற்பாலத்திலும் துவாசில் உள்ள இரண்டாம் இணைப்புப் பாலத்திலும் நெரிசலைக் குறைக்க சிறப்புக் குழு 23 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக திரு வான் அகமது தெரிவித்தார்.

நவம்பர் 9ஆம் தேதி நிலவரப்படி, அந்த 23 திட்டங்களில் 13 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். எஞ்சிய 10 திட்டங்களில் ஆறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான்கு திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.

பயணிகளின் வசதிக்காக, துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலத்தில் உள்ள சுல்தான் அபு பக்கர் காம்பிளெக்சில், பேருந்து நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்படும் என்றும் திரு வான் அகமது கூறினார்.

சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகள் வழியாக பேருந்துச் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில், அதற்கான தீர்வுகளைக் குழு ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள 'ஆர்எஃப்ஐடி'யின் பயன்பாடும் எதிர்காலத் திட்டமிடுதலுக்குக் கருத்தில் கொள்ளப்படும் என்றும் திரு வான் அகமது குறிப்பிட்டார்.