நோம்பென்: இந்தியா, அமெரிக்கா ஆகியவற்றுடனான தன் உறவை ஆசியான் அமைப்பு மேம்படுத்தியுள்ளது. அந்த இரு நாடுகளுடன் ஆசியான் முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது.
கம்போடியத் தலைநகர் நோம் பென்னில் நேற்று நடந்த ஆசியான் கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது.
இந்த உடன்பாடுகள் ஆசியான் தனது முக்கியப் பங்காளி களுடன் உறவுகளை மேம் படுத்த மேற்கொண்டுள்ள ஆகப் புதிய முயற்சியாகும். ஏற்கெனவே ஆஸ்திரேலியா, சீனா ஆகியவற்றுடன் ஆசியான் அத்தகைய உத்திபூர்வ பங்காளித்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையே பொதுச் சுகாதாரப் பராமரிப்பு, இணையப் பாதுகாப்பு, வட்டாரத் தொடர்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் வர்த்தகத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் பங்காளித்துவம் செய்துகொள்ளப்பட்டது.
ஆசியான் தலைவர்கள் இந்திய துணை அதிபர் ஜெகதீப் தன்கருடன் நேற்று நடத்திய சந்திப்பில் சிங்கப்பூர், இருதரப்பு உறவு மேம் படுத்தப்பட்டிருப்பதை வலுவாக வரவேற்பதாகக் கூறினார்.
இந்தியாவும் ஆசியானும் பேச்சு வார்த்தையைத் தொடங்கிய 30வது ஆண்டைக் கொண்டாடி வருவதைச் சுட்டிய பிரதமர் லீ, சரியான நேரத்தில் இருதரப்பு உறவு மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார். ஆசியானையும் இந்தியாவையும் ஒருங்கிணைக்கும் நாடாக தற்போது சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறது.
இந்த வட்டாரக் கட்டமைப்புகள் மாறிவரும் வேளையில் இந்தியா ஆசியான் முன்னெடுக்கும் அமைப்புகளுக்கும் அது நடுநாயகமாக இருப்பதற்கும் இந்தியா அளித்து வரும் ஆதரவை அமைப்பு மதிப்பதாக திரு லீ கூறினார்.
ஆசியானின் இந்தோ-பசிஃபிக் கண்ணோட்டத்துக்கும் இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் பெருங் கடல்கள் முயற்சிக்கும் இடையே நடைமுறை ஒத்துழைப்பை இரு தரப்புகளும் பரிசீலிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
ஆசியானும் இந்தியாவும் இன்னும் வலுவான வர்த்தக, முதலீடு களைப் பரிமாற்றங்களுக்கு வசதி செய்யவேண்டும் என்றார் திரு லீ.
அதிபர் பைடனின் பயணம்
நோம்பென்னுக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஆசியானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவம், நம் வாழ்நாளின் முக்கியப் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவும்," என்றார்.
அந்த உடன்பாடு, சுதந்திரமான, நிலையான, வளமான, மீள்திறனும் பாதுகாப்பும் கொண்ட இந்தோ-பசிஃபிக் வட்டாரத்தை உருவாக்க உதவும் என்று கூறினார்.
மேலும், தென்சீனக் கடல் முதல் மியன்மார் வரையிலான விவகாரங்களிலும் பொதுவான சவால்களுக்குப் புத்தாக்கமிக்க தீர்வுகளைக் காணவும் அமெரிக்கா ஆசியானுடன் ஒத்துழைக்கும் என்ற திரு பைடன் கூறினார்.
சுருக்கமாகப் பேசிய திரு பைடன், ஒரு கட்டத்தில் கம்போடியாவை கொலம்பியா என்றார்.
திரு பைடன் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் தென்கிழக்காசியாவுக்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும்.
இவ்வட்டாரத்தில் சீனாவின் ராணுவ, தொழில்நுட்ப பலத்தை எதிர்கொள்வதும் அமெரிக்காவை இங்கு முக்கியப் பாதுகாப்புப் பங்காளி நாடாக்குவதும் அவரது பயண நோக்கங்களில் ஒன்று.

