சிங்கப்பூர் உடனான மலேசியாவின் இரு தரைவழி எல்லைகளில் வாகனங்கள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மலேசிய அரசாங்க சிறப்புக் குழு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் வான் அகமது டாலன் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
மலேசிய மோட்டார்சைக்கிளோட்டிகளுக்காக 25 தானியக்க குடிநுழைவு முறையைச் சேர்ப்பதும் அந்தத் திட்டங்களில் அடங்கும்.
அத்துடன் கேலாங் பாத்தா குடிநுழைவு, சோதனைச்சாவடியில் உள்ள பேருந்து முனையத்தில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள் வதும் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு வரும் வாகனங்களுக்காக 'ஆர்எஃப்ஐடி' முறையைப் பயன் படுத்தி சுங்கக் கட்டணங்களைச் செலுத்துவது குறித்து ஆராய் வதும் இத்திட்டங்களில் அடங்கும்.
வரும் நவம்பர் 19ஆம் தேதி மலேசியப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நாளாகும். அன்று சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு வரும் வாகனங்களால் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க, குடிநுழைவுத் துறை கடந்த வாரம் ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தது.
கேலாங் பாத்தா சோதனைச்சாவடியில் உள்ள 48 வாகனத் தடங்களில், குறைந்தது 12 தடங்கள் ஜோகூரிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்காக பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சிங்கப்பூரிலிருந்து வரும் வாகனங் களுக்காக அத்தடங்களை உடனடியாக மாற்ற முடியும் எனக் கூறப்பட்டது.
சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் உட்லண்ட்சில் உள்ள காஸ்வே கடற்பாலத்திலும் துவாசில் உள்ள இரண்டாம் இணைப்புப் பாலத்திலும் நெரிசலைக் குறைக்க சிறப்புக் குழு 23 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக திரு வான் அகமது தெரிவித்தார்.
நவம்பர் 9ஆம் தேதி நிலவரப்படி, அவற்றில் 13 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். எஞ்சிய 10 திட்டங்களில் ஆறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான்கு திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.
பயணிகளின் வசதிக்காக, துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலத்தில் உள்ள சுல்தான் அபு பக்கர் காம்ப்ளெக்சில், பேருந்து நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்படவுள்ளது.

