மோனலிசா
சிங்கப்பூரின் புதிய இயற்கைப் பூங்காவான ரைஃபல் ரேஞ்ச் இயற்கைப் பூங்கா நேற்று திறக்கப்பட்டது. மத்திய நீர்த்தேக்கப் பகுதி, புக்கிட் தீமா இயற்கைப் பூங்கா ஆகியவை அடங்கிய மத்திய இயற்கைப் பூங்கா கட்டமைப்பில் தேசிய பூங்காக் கழகம் திறந்துள்ள எட்டாவது இயற்கைப் பூங்கா இதுவாகும்.
புக்கிட் தீமா இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதியின் தெற்குப் பகுதியில், ரைஃபல் ரேஞ்ச் சாலையில் அமைந்துள்ள பூங்கா 66 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டது. அப்பூங்காவில் ஏழு கிலோமீட்டர் நீளமுடைய நடைபயண வழித் தடங்களும் பலகை மேல் நடக்கும் வசதிகளும் உள்ளன. சிறார்களும் உடற்குறை உள்ளோரும் சக்கர நாற்காலியின் உதவியுடன் தடையற்ற வகையில் பயணிக்க முடியும்.
ரைஃபல் ரேஞ்ச் இயற்கைப் பூங்கா டவுன்டௌன் ரயில்பாதையின் பியூட்டி வேர்ல்ட் எம்ஆர்டி நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.
பொதுமக்கள் இந்நிலையத்திலிருந்து நடந்தே இப்பூங்காவின் ரம்பை பலகை வழித்தடத்தை வந்தடையலாம்.
அப்பூங்காவில் புனுகுப் பூனை, கோலுகோ, பறக்கும் அணில், அழிந்துவரும் இனமான சுண்டா பாங்கோலின் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களும் மரம், செடி, கொடி வகைகளும் உள்ளன.
நேற்றைய திறப்புவிழாவில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
"2030ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரில் இதுபோன்ற மேலும் ஐந்து இயற்கைப் பூங்காக்கள் அமைக்கப்படும். வருங்காலத்தில் சிங்கப்பூரர் ஒவ்வொருவரின் இல்லத்திலிருந்தும் பத்து நிமிட நடை தூரத்தில் ஒரு பூங்காவை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்," என்று திரு வோங் கூறினார்.
துணைப் பிரதமர் வோங்கும் நிகழ்ச்சியில் அவருடன் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும், தேசிய பூங்காக் கழகத்தின் ஒரு மில்லியன் மரங்கள் நடும் திட்டத்தையொட்டி, ரைஃபல் ரேஞ்ச் இயற்கைப் பூங்காவில் மரங்களை நட்டனர்.
பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் 31 மீட்டர் உயரத்தி லிருந்து பூங்காவின் மொத்த பரப்பளவையும் காணும் வகையில் 'பார்க்கும் தளம்' ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அவ்விடம் 1950களில் கிரானைட் குவாரியாக இருந்தது. அதன் சுற்றுப்பகுதியில் கிராமங்களும் இருந்தன.
பின்னர் சிங்கப்பூர் துப்பாக்கி அணியின் பராமரிப்பில் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகள் நடைபெற்றதால் அவ்விடம் ரைஃபல் ரேஞ்ச் என பெயர்பெற்றது.

