தமிழ் வழியில் மருத்துவம், நிபுணத்துவப் படிப்புகளை அறிமுகப்படுத்தும்படி தமிழக அரசுக்கு இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"தாய்மொழி தமிழைப் பாட போதனை மொழியாக ஆக்கினால் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியும். உயர்கல்வியைத் தொடர வசதியாக இருக்கும். தாங்கள் எடுத்து படிக்கும் பாடங்களில் மேலும் ஆய்வுகளை அவர்கள் நடத்தலாம்," என்று அமித் ஷா தெரிவித்தார்.
சென்னையில் சனிக்கிழமை இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் பவளவிழாவில் உரையாற்றிய அமித் ஷா, தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அந்த மொழியின் அருமையைத் தெரிந்துகொள்ளும் வகையில் மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தமிழ் வழியில் போதிக்க வேண்டும் என்று கூறினார்.
உலகின் ஆகப் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழை மேம்படுத்துவது இந்தியா முழுவதற்கும் உள்ள பொறுப்பு என்றாரவர்.
தமிழ் வழியில் மருத்துவம், நிபுணத்துவப் படிப்புகளைப் போதிக்க தமிழ்நாடு அரசு தொடங்கினால், அது தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கு மாபெரும் சேவையாகக் கருதப்படும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அண்மையில் சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.
ஐஐடி, ஐஐஎம் முதலான உயர்நிலைக் கல்வி நிலையங்களில் இந்தி மொழிப் பயன்பாட்டை மேம்படுத்த அந்தக் குழு பரிந்துரைத்தது. இதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தார்.
இந்தச் சூழலில், அமித் ஷாவின் தமிழ் பயிற்று மொழி யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, அமித் ஷாவின் கருத்துக்குப் பதிலளித்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழில் பொறியியல் படிப்பை 2010ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு அறிமுகப்படுத்தியது என்று குறிப்பிட்டார்.
அதேபோல, மருத்துவப் படிப்பைத் தமிழில் போதிப்பதற்கும் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதற்காக மூன்று பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மொழி பெயர்ப்புப் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

