குறைந்த சம்பள ஊழியர்களுக்கு 5.5% - 7.5% சம்பள உயர்வு: தேசிய சம்பள மன்றம் பரிந்துரை

2 mins read
ed6e17bc-45ea-41c7-9043-aef9452cc100
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முதலாளிகள் குறைந்த சம்பள ஊழியர்களின் சம்பளத்தை 5.5 விழுக்காடு முதல் 7.5 விழுக்காடு அல்லது குறைந்தது 80 வெள்ளி முதல் 100 வெள்ளி வரை உயர்த்த வேண்டும் என்று தேசிய சம்பள மன்றம் பரிந்துரை செய்துள்ளது.

வாழ்க்கைச் செலவினம் உயர்ந்துவரும் வேளையில், ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும்படி மன்றம் முதலாளிகளைக் கேட்டுக்கொண்டது.

மன்றம், 2022ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரைக்குமான அதன் சம்பள பரிந்துரைகளை திங்கட்கிழமை (நவ 14) அன்று வெளியிட்டது.

குறைந்த சம்பள ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 4.5 விழுக்காடு முதல் 5.5 விழுக்காடு வரை, அல்லது 70 வெள்ளி முதல் 90 வெள்ளி வரையிலான சம்பள உயர்வை மன்றம் பரிந்துரை செய்திருந்தது.

குறைந்த சம்பள ஊழியர்களுக்குக் குறைவான சம்பள உயர்வு பரிந்துரைக்கு தொழிலாளர் இயக்கம் கடந்த ஆண்டு இணங்கியதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவர் மேரி லியூ கூறினார்.

பொருளியல் மீட்சி அடைந்தால் இவ்வாண்டு கூடுதல் சம்பள உயர்வுக்கு பரிந்துரை செய்யப்படலாம் என்ற அடிப்படையின்பேரில், இயக்கம் அதற்கு இணங்கியதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டு பொருளியல் மேம்பட்டு இருப்பதால் அந்த உறுதிமொழியை நாம் அனைவரும் நிறைவேற்றுகிறோம் என்றார் திருவாட்டி லியூ.

தேசிய சம்பள மன்றம், முத்தரப்புப் பங்காளிகளான தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் பேசினார்.

நிறுவனங்களின் வர்த்தகச் செலவுகள் அதிகமாகி வருவதையும் வர்த்தக எதிர்காலம் ஏற்ற இறக்கமாக இருப்பதையும் சம்பள மன்றம் ஏற்றுக்கொண்டது. அதனால் சம்பள உயர்வு நியாயமான, நீடித்திருக்கக்கூடிய வகையில் இடம்பெற வேண்டும் என்று அது கூறியது.