எக்காலத்திலும் அணுவாயுதம் கூடாது: அமெரிக்க, சீன அதிபர்கள் திட்டவட்டம்
பாலித் தீவிலிருந்து
இர்ஷாத் முஹம்மது
துணைச் செய்தி ஆசிரியர்
இந்தோனீசியாவின் பாலித் தீவில் நேற்று சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான வேற்றுமைகளை முறையாகக் கையாண்டு, பூசலைத் தவிர்க்க உறுதிபூண்டனர்.
உக்ரேன் போர் உட்பட இனி எந்தக் காலத்திலும் அணுவாயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் திட்டவட்டமாகக் கூறினர்.
ஒருபோதும் அணுவாயுதப் போர் இடம்பெறக்கூடாது என்றும் அப்படிப்பட்ட போரில் என்றுமே வெற்றி இருக்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உக்ரேன்மீது அணுவாயுதத்தைப் பயன்படுத்துவதையோ பயன்படுத்தப்போவதாக அச்சுறுத்துவதையோ இருதரப்பும் எதிர்ப்பதாகவும் அதன் தொடர்பில் தங்களின் இணக்கத்தை வலியுறுத்தியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.
தைவான் மீதான சீனாவின் மிகக் கடுமையான செயல்பாடுகள் அமைதியைச் சீர்குலைக்கும் அபாயத்தைத் தருவதாக திரு பைடன், ஸியிடம் தெரிவித்தார்.
ஆனால் சீனா-அமெரிக்கா உறவுகளின் அரசியல் அடித்தளத்தில் தைவான் முக்கிய அங்கம் வகிக்கிறது என்றும் சீனாவிற்கு தைவான் மிக முக்கியம் என்பதால் அந்தச் 'சிவப்புக் கோட்டை' தாண்டாமல் இருப்பதே இருநாட்டு உறவின் முதல் கட்டம் என்றும் அதிபர் ஸி வலியுறுத்தினார்.
உலகின் இருபெரும் பொருளியல்களாக விளங்கும் அமெரிக்காவும் சீனாவும் அண்மைக் காலமாக தைவான் விவகாரம், உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, வணிகப் போட்டி எனப் பல அம்சங்களில் இணக்கப் போக்குடன் இல்லை என்பதால் அந்நாடுகளுக்கு இடையிலான உறவில் சரிவு ஏற்பட்டது.
"சீனாவும் அமெரிக்காவும் உறவை சரிவரப் பேணும் என்று உலகம் எதிர்பார்க்கிறது," என்று சீன அதிபர் ஸி கூறினார். "போட்டித்தன்மை சண்டையாக முற்றிவிடுவதைத் தவிர்க்கவும் வேற்றுமையை முறையாகக் கையாளவும் விரும்புகிறேன்," என்றார் அமெரிக்க அதிபர் பைடன்.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் திரு பைடன் சீன அதிபரைச் சந்திப்பது இதுவே முதன்முறை.
இருநாட்டுக் கொடிகளுக்கு முன்பாக கைகுலுக்கிய பின்னர் உலகமே காத்திருந்த பேச்சுவார்த்தையை இருதரப்பினரும் தொடங்கினர்.
அதிபர் ஸியும் சீனப் பேராளர்களும் தங்கியுள்ள பாலியின் நுசா டுவா பகுதியிலுள்ள சொகுசுவிடுதியில் சந்திப்பு நடைபெற்றது.
உலகம் முக்கியமான கால கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அதிபர் ஸி, இனி இருநாட்டு உறவிற்கும் சரியான திசையைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றும் உறவை மேம்படுத்தவேண்டும் என்றும் சொன்னார்.
இரு நாடுகளும் வெவ்வேறு வரலாறு, கலாசாரம், சமூக அமைப்புகள், வளர்ச்சிப் பாதைகளைக் கொண்டிருந்தாலும், அவை இருதரப்பு உறவுகளுக்குத் தடையாக விளங்கக்கூடாது என்றார் அவர். மீண்டும் சரியான தடத்திற்கு உறவைக் கொண்டுவர அதிபர் பைடனுடன் இணைந்து பணிபுரிவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாலித்தீவில் நேற்று மாலை 5.30 மணியளவில் தொடங்கிய சந்திப்பு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடித்தது.
தாம் துணை அதிபராகப் இருந்தபோது அதிபர் ஸியிடம் கிட்டத்தட்ட 67 மணி நேரம் நேரடிச் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கணித்துள்ள திரு பைடன், அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றபின் ஐந்து முறை மெய்நிகர் வழியில் திரு ஸியிடம் பேசியுள்ளார்.
நேரில் சந்தித்துப் பேசுவதற்கு ஈடுஇணை இல்லை என இரு நாட்டு அதிபர்களும் தெரிவித்தனர்.
பூச்செண்டுகள் நடுவே அலங்கரிக்க, இரு நீளமான மேசைகளில் நேருக்கு நேர் முகம் பார்த்து இருபெரும் தலைவர்களும் பேசினர்.
இருபுறமும் முகக்கவசங்கள் அணிந்து அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். ஆனால் அதிபர்கள் இருவரும் முகக்கவசம் அணியவில்லை.
கொவிட்-19 பரவலுக்குப்பின் அதிபர் ஸி மேற்கொண்டுள்ள இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுதான்.

