டிபிஎஸ், ஓசிபிசி வங்கிகள் வட்டி விகிதத்தைக் கூட்டின: நிலை வட்டிவிகித வீட்டுக் கடனுக்கான வட்டி 4.3%

டிபிஎஸ், ஓசிபிசி வங்கிகள் வட்டி விகிதத்தைக் கூட்டின: நிலை வட்டிவிகித வீட்டுக் கடனுக்கான வட்டி 4.3%

3 mins read
1743f232-54b6-41d3-9279-431d43395a3b
-

டிபிஎஸ் வங்கியும் ஓசிபிசி வங்கியும் தங்களுடைய நிலை வட்டி விகித கடன் திட்டங்களுக்கான வட்டியை கூட்டி இருக்கின்றன. அந்த வட்டி விகிதம் 4%ஐ தாண்டிவிட்டது.

டிபிஎஸ் வங்கி, இரண்டு முதல் ஐந்தாண்டு காலம் வரைப்பட்ட கடன் தொகைக்கான வட்டியை 4.25% என்று நிர்ணயித்துள்ளது.

அதேவேளையில், ஓசிபிசி வங்கி தன்னுடைய ஓராண்டு மற்றும் ஈராண்டு நிலை வட்டி விகிதக் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 4.3% ஆக ஆக்கி இருக்கிறது.

அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் வாடிக்கையாளர்கள் பலரும் நிலைவட்டி விகித கடன் திட்டங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள் என்று டிபிஎஸ் வங்கி பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.

ஆகையால், டிபிஎஸ் வங்கி, நீண்டகாலப் போக்கிலான கடன்களை வழங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்கு நிலையான வட்டி விகிதத்தைச் செலுத்தி வரலாம். வட்டி மேலும் ஏறாது என்ற உத்தரவாதமும் இதன்மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் என்று பேச்சாளர் மேலும் விளக்கினார்.

நிலை வட்டி விகித கடன் ஏற்பாடு வாடிக்கையாளர்களிடையே பிரபலமானதாக இருக்கிறது. இதனால் ஓசிபிசி வங்கி மறுபடியும் நிலை வட்டி விகித திட்ட கடன் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துகிறது என்று இந்த வங்கியின் வீட்டுக் கடன் பிரிவு தலைவர் திருவாட்டி மேரிஅனி புவா தெரிவித்தார்.

இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பொருத்தமான கடன் அடைப்புக் காலத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அவர் விளக்கினார்.

முன்னதாக ஹெச்எஸ்பிசி வங்கி இம்மாதம் 8ஆம் தேதி தன்னுடைய ஈராண்டு, மூவாண்டு கடன் திட்டங்களுக்கான நிலை வட்டி விகிதத்தை 4.25% ஆகக் கூட்டியது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் நிலையான வட்டி விகிதத்துடன் கூடிய வீட்டுக் கடன் ஏற்பாடுகளுக்கான வட்டி அளவு 4%க்கும் அதிகமாகிவிட்டது.

வட்டி விகிதம் இந்த அளவுக்கு கூடினாலும்கூட கடன் வாங்குவோர் அளவுக்கு அதிகமாக கவலைப்பட வேண்டிய தேவை இல்லை என்று கூறப்படுகிறது.

இதற்குக் காரணம் ஓசிபிசி வங்கியும் ஹெச்எஸ்பிசி வங்கியும் வீட்டு உரிமையாளர் ஒருவர் கூடியபட்சமாக எந்த அளவுக்குக் கடன் வாங்க முடியும் என்பதைக் கணக்கிட 4.5% என்ற அதிக வட்டி விகிதத்தைப் பயன்படுத்துகிறது.

இந்த வட்டி விகிதம் டிபிஎஸ் வங்கியில் 4.25% ஆக இருக்கிறது. இதன் விளைவாக வீட்டு உரிமையாளர்கள் குறைந்த அளவிலான தொகையை மட்டுமே கடனாகப் பெற முடியும்.

எடுத்துக்காட்டாக வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு நிரந்தர மாத வருவாய் $10,000 என்றால், அவர் 25 ஆண்டு காலம் கடனை அடைக்க வேண்டும் என்றால், அந்த உரிமையாளர் சிங்கப்பூர் நாணய ஆணையம் நிர்ணயித்து உள்ள நடுத்தரகால கடன் வட்டி விகிதமான 4%ன் அடிப்படையில் ஏறக்குறைய $1.05 மில்லியன் கடனைப் பெறலாம்.

டிபிஎஸ் வங்கியின் 4.25% வட்டி அளவை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு பார்த்தால், அதே வீட்டு உரிமையாளர் கிட்டத்தட்ட $1.02 மில்லியன்தான் கடனாகப் பெற முடியும்.

ஓசிபிசி வங்கியைப் பார்க்கையில், இந்தக் கூடினபட்ச கடன் அளவு சுமார் $1 மில்லியனாக இருக்கிறது.

டிபிஎஸ் வங்கி பொது அடுக்குமாடி வீடுகளின் உரிமையாளர்களுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வீட்டுக் கடன் திட்டத்தைக் கொண்டிருக்கிறது.

இத்திட்டத்தின்படி கடன் வாங்குவோர் ஆண்டுக்கு 2.6% என்ற விகிதத்தில் வட்டி செலுத்த வேண்டும். இது வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இப்போதைய சலுகையுடன் கூடிய வட்டி விகிதத்திற்கு ஒப்பானது.