டிபிஎஸ், ஒசிபிசி வங்கிகள் வீட்டுக் கடனுக்கான நிலை வட்டிவிகிதத்தை நேற்று உயர்த்தியதை அடுத்து, வீட்டுக் கடன் வட்டி விகிதம் நான்கு விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது.
டிபிஎஸ் வங்கி, இரண்டு முதல் ஐந்தாண்டு காலம் வரைப்பட்ட கடன் தொகைக்கான நிலை வட்டியை 4.25 விழுக்காடு என்று நிர்ணயித்துள்ளது.
ஓசிபிசி வங்கி தன்னுடைய ஓராண்டு, ஈராண்டு கால நிலை வட்டி விகிதக் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 4.3% ஆக உயர்த்தி இருக்கிறது.
அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்த்து, பல வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடனைச் செலுத்த மாறா வட்டி விகிதத்தைத் தொடர்ந்து தேர்வு செய்வதாக டிபிஎஸ் வங்கி பேச்சாளர் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
டிபிஎஸ் வங்கி, நீண்டகாலப் போக்கிலான கடன்களை வழங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்கு நிலையான வட்டி விகிதத்தைச் செலுத்தி வரலாம்.
வட்டி மேலும் ஏறாது என்ற உத்தரவாதமும் இதன்மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் என்று பேச்சாளர் விளக்கினார்.
ஒசிபிசி வங்கி நிலை வட்டி விகிதம் கொண்ட வீட்டுக் கடன் திட்டங்களை அக்டோபர் மாதக் கடைசியில் தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.
ஆனால் வாடிக்கையாளர்களிடமிருந்து அதற்கு அதிகத் தேவை இருந்ததால் அவற்றை வங்கி மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளதாக ஒசிபிசி வங்கியின் வீட்டுக் கடன் பிரிவுத் தலைவர் மேரி ஆன் புவா கூறினார்.
தங்கள் தேவைக்கேற்ற கால அவகாசத்தைத் தேர்வு செய்யும் நீக்குப்போக்கை இது வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக எச்எஸ்பிசி வங்கி இந்த மாதம் 8ஆம் தேதி தன்னுடைய ஈராண்டு, மூவாண்டு கடன் திட்டங்களுக்கான நிலை வட்டி விகிதத்தை 4.25% ஆகக் கூட்டியது.
இந்த நடவடிக்கைகளின் மூலம் நிலையான வட்டி விகிதத்துடன் கூடிய வீட்டுக் கடன் ஏற்பாடுகளுக்கான வட்டி அளவு 4 விழுக் காட்டுக்கும் அதிகமாகிவிட்டது.
வட்டி விகிதம் இந்த அளவுக்கு கூடினாலும்கூட கடன் வாங்குவோர் அளவுக்கு அதிகமாக கவலைப்பட வேண்டிய தேவை இல்லை என்று கூறப்படுகிறது.
இதற்குக் காரணம், ஓசிபிசி வங்கியும் எச்எஸ்பிசி வங்கியும் வீட்டு உரிமையாளர் ஒருவர் கூடினபட்சமாக எந்த அளவுக்குக் கடன் வாங்க முடியும் என்பதைக் கணக்கிட 4.5% என்ற அதிக வட்டி விகிதத்தைப் பயன்படுத்துகிறது.
இந்த வட்டி விகிதம் டிபிஎஸ் வங்கியில் 4.25% ஆக இருக்கிறது.
இதன் விளைவாக வீட்டு உரிமையாளர்கள் குறைந்த அளவிலான தொகையை மட்டுமே கடனாகப் பெற முடியும்.
எடுத்துக்காட்டாக, வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு நிரந்தர மாத வருவாய் $10,000 என்றால், அவர் 25 ஆண்டு காலம் கடனை அடைக்க வேண்டும் என்றால், அந்த உரிமையாளர் சிங்கப்பூர் நாணய ஆணையம் நிர்ணயித்து உள்ள நடுத்தரகால கடன் வட்டி விகிதமான 4 விழுக்காட்டின் அடிப்படையில் ஏறக்குறைய $1.05 மில்லியன் கடனைப் பெறலாம்.
டிபிஎஸ் வங்கியின் 4.25% வட்டி அளவை அடிப்படையாகக்கொண்டு கணக்கிட்டு பார்த்தால், அதே வீட்டு உரிமையாளர் கிட்டத்தட்ட $1.02 மில்லியன்தான் கடனாகப் பெற முடியும்.
ஓசிபிசி வங்கியைப் பார்க்கையில், இந்தக் கூடினபட்ச கடன் அளவு ஏறக்குறைய $1 மில்லியனாக இருக்கிறது.
டிபிஎஸ் வங்கி பொது அடுக்கு மாடி வீடுகளின் உரிமையாளர்களுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வீட்டுக் கடன் திட்டத்தைக் கொண்டிருக்கிறது.
இத்திட்டத்தின்படி கடன் வாங்குவோர் ஆண்டுக்கு 2.6% என்ற விகிதத்தில் வட்டி செலுத்த வேண்டும். இது வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இப்போதைய சலுகையுடன் கூடிய வட்டி விகிதத்திற்கு ஒப்பானது.

