ஏறக்குறைய 2.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் $700 வரை பெறுவர்

ஏறக்குறைய 2.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் $700 வரை பெறுவர்

2 mins read

கிட்­டத்­தட்ட 2.5 மில்­லி­யன் சிங்­கப்­பூ­ரர்­கள் வரும் டிசம்­ப­ரில் $700 வரை ரொக்­கத் தொகை­யைப் பெறு­வர். இரு வெவ்­வேறு திட்­டங்­க­ளுக்­காக இந்த உத­வித் தொகை வழங்­கப்­ப­டு­கிறது.

பொருள் சேவை வரி உயர்­வின் பாதிப்­பை­யும் உய­ரும் வாழ்க்­கைச் செல­வி­னத்­தை­யும் சமா­ளிக்க மக்­க­ளுக்கு ஆதரவளிக்க அர­சாங்­கம் அறி­வித்­துள்ள உத­வித் தொகுப்­புத் திட்­டங்­க­ளின் ஒரு பகுதி இந்த உத­வித் திட்­டங்­கள்.

ஒரே முறை வழங்­கப்­படும் வாழ்க்­கைச் செல­வின சிறப்­புத் தொகை­யாக ஏறக்­கு­றைய 2.5 மில்­லி­யன் சிங்­கப்­பூர் பெரி­ய­வர்­கள் $500 வரை பெறு­வர். இத்­தொகை அக்­டோ­பர் மாதம் அறி­விக்­கப்­பட்ட 1.5 பில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள ஆத­ர­வுத் தொகுப்­புத் திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும். துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அதனை அறி­வித்­தி­ருந்­தார்.

அத்­து­டன், கிட்­டத்­தட்ட 2.9 மில்­லி­யன் சிங்­கப்­பூர் பெரி­ய­வர்­களுக்கு உத்­த­ர­வா­தத் தொகுப்­புத் திட்­டத்­தின்­கீழ் $200 வரை­யி­லான ரொக்­கம் வழங்­கப்­ப­டவுள்­ளது.

பண­வீக்­கம் தற்­போது இருக்­கும் சூழ­லி­லும், பொருள் சேவை வரி உயர்­வால் ஏற்­படும் கூடு­தல் செல­வு­களை ஐந்­தாண்­டு­க­ளுக்கு ஈடு­கட்ட உத்­த­ர­வா­தத் தொகுப்­புத் திட்­டம் பெரும்­பா­லான சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் உத­வும்.

குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­கள் பத்­தாண்­டு­க­ளுக்­குக் கூடு­தல் செல­வு­க­ளைச் சமா­ளிக்க இத்­திட்­டம் உத­வும் என்று நிதி அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறி­யது.

இவ்­வாண்டு டிசம்­பர் முதல் அடுத்த ஆண்டு பிப்­ர­வரி வரை முதல் கட்ட உத­வித் தொகை வழங்­கப்­படும்.

உத்­த­ர­வாத தொகுப்­புத் திட்­டத்­தில் கூடு­த­லாக $1.4 பில்­லி­யன் செலுத்­தப்­படும் என்று திரு வோங் கடந்த வாரம் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார்.

முன்­ன­தாக $6.6 பில்­லி­ய­னாக இருந்த அத்­தொகை, பின்­னர் $8 பில்­லி­ய­னாக அதி­க­ரிக்­கப்­பட்­டது. அது பற்றிய விவ­ரங்­கள் 2023 வரவு செல­வுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­படும்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் வசிக்­கும் தகு­தி­பெற்ற குடும்­பங்­கள் வழக்­க­மா­கப் பெறும் யு-சேவ் கட்­ட­ணத் தள்­ளு­ப­டிக்­கும் மேலாக, பொதுப் பய­னீட்­டுக் கட்­ட­ணங்­களை ஈடு­கட்ட $95 வரை­யி­லான கூடு­தல் ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு யு-சேவ் கட்­ட­ணக் கழி­வைப் பெறுவர். அடுத்த ஆண்டு ஜன­வரி­யில் இது வழங்­கப்­படும்.

மேலும், ஒவ்­வொரு சிங்­கப்­பூர் குடும்­ப­மும் $300 மதிப்­புள்ள சமூக மேம்­பாட்டு மன்ற பற்­றுச்­சீட்­டு­களை­யும் பெறும். அவற்றை திட்டத்தில் பங்கேற்கும் அக்­கம்­பக்­கக்­க­டை­கள், உண­வங்­கா­டிக் கடை­கள், பேரங்­கா­டி­களில் பயன்­ப­டுத்­த­லாம்.

வரும் 2023 பிப்ர­வ­ரி­யில் குறைந்த வரு­மானம் பெறும் சிங்­கப்­பூர் முதி­ய­வர்­கள் ஜிஎஸ்டி பற்றுச்­சீட்டு ரொக்­கத் (முதி­ய­வர்­க­ளுக்­கான போனஸ்) திட்­டத்­தின்­கீழ், $300 வரை­யி­லான ரொக்­கத் தொகை­யைப் பெறு­வர்.

அத­னு­டன், தகு­தி­பெற்ற 55 அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வய­துள்ள சிங்­கப்­பூ­ரர்­கள், 20 அல்­லது அதற்­கும் குறை­வான வய­துள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் ஆகி­யோ­ருக்கு உத்­த­ர­வா­தத் தொகுப்பு மெடி­சேவ் திட்­டத்­தின்­கீழ், அவர்­க­ளது மத்­திய சேம நிதி மெடி­சேவ் கணக்­கில் $150 செலுத்­தப்­படும்.

பெறு­நர்­க­ளுக்கு­ பணம் வரவு வைக்­கப்­பட்ட பின்­னர் சிங்­பாஸ் செயலி அல்­லது குறுஞ்செய்தி மூலம் தெரி­விக்­கப்­படும். வாட்ஸ்­அப் வழி­யா­கத் தெரி­விக்­கப்­ப­டாது என்று நிதி அமைச்சு கூறி­யது.