தமது 95 வயது முதலாளியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த மியன்மார் நாட்டுப் பணிப்பெண்ணுக்கு 16 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி காலையில், திருவாட்டி ஆங் பெக் சாய் என்ற அந்த மூதாட்டி தன் முகத்தில் உமிழ்ந்ததாக சந்தார் ஹிட்டூ என்ற அந்தப் பணிப்பெண் கூறினார்.
அதனால் கோபமுற்ற சந்தார், அம்மூதாட்டிக்குப் பாடம் கற்பிக்க நினைத்து அன்று நண்பகல் நேரத்தில் அவரது முகத்திலும் கழுத்திலும் கத்தியால் குத்தினார்.
ரெக்ரியேஷன் சாலையிலுள்ள திருவாட்டி ஆங்கின் தரைவீட்டில் இந்தக் கொலை நிகழ்ந்தது.
சந்தார் 36 வயதானவர் என்று அவரது அடையாள ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், உண்மையில் அவருக்கு 51 வயது என்றும் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பணிப்பெண் முகவையிடம் பொய்யான தகவலைக் கூறினார் என்றும் அவரது சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் டேனியல் கோ தெரிவித்தார்.
கடந்த 2019 டிசம்பரில் சிங்கப்பூர் வந்த சந்தார் முதலில் வேறு ஒரு வீட்டில் வேலைசெய்தார். பின்னர் 2020 பிப்ரவரியில் அவர் திருவாட்டி ஆங்கின் வீட்டிற்கு மாறினார்.
திருவாட்டி ஆங்கைப் பார்த்துக்கொண்டதோடு மற்ற வீட்டு வேலை களையும் அவர் செய்துவந்தார்.
சம்பவ நாளன்று காலை 8 மணி அளவில், சந்தாரைத் திட்டிய திருவாட்டி ஆங், அவரது முகத்திலும் உமிழ்ந்தார்.
தமது மேல்சட்டையால் அதைத் துடைத்த சந்தார், வேறு எதுவும் செய்யாமல் அமைதிகாத்தார்.
சில மணி நேரம் கடந்த பின்னரும் அச்சம்பவம் அவரது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. பிற்பகலில் திருவாட்டி ஆங் உறங்கச் சென்றுவிட்டார். அவருடைய 78 வயது மகனும் வெளியில் சென்றிருந்தார்.
அப்போது, சமையலறையில் இருந்து இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு திருவாட்டி ஆங்கின் படுக்கையறைக்குள் புகுந்தார் சந்தார். ஒரு கத்தியை அவரது வாயில் செருகிய சந்தார், இன்னொன்றைக் கொண்டு அவரின் இடப்பக்க கழுத்தில் குத்தினார்.
அடுத்தடுத்த வீடுகளில்தான் திருவாட்டி ஆங்கின் மற்ற பிள்ளைகள் வசித்து வந்ததாகக் கூறப்பட்டது.
அவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வேலி ஏறி குதித்து வெளியே வந்தார் சந்தார்.
பின்னர் அவ்வழியே சென்ற ஒருவரிடம் தம்மைக் காவல்துறையிடம் அழைத்துச் செல்லும்படி சந்தார் கேட்டார். அந்த வழிப்போக்கர் ஒரு கிராப் காரை வாடகைக்கு அமர்த்தி, சந்தாருடன் காவல்நிலையத்திற்குச் சென்றார்.
காவல் நிலையத்தில் தன் முதலாளியைக் கொன்றுவிட்டதாக சந்தார் கூறினார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் திருவாட்டி ஆங்கின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் சுய நினைவின்றிக் கிடந்தார். சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
சந்தார்மீது முதலில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்சினை இருப்பது தெரியவந்ததை அடுத்து, பின்னர் அது குறைக்கப்பட்டது.

