உக்ரேன் போருக்கு எதிராக வலு வான கருத்துகளை ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் முன்வைத்ததன்வழி அனைத்துலகச் சமூகம் அந்தப் படையெடுப்பை எந்த அளவுக்கு எதிர்க்கிறது என்பதை ரஷ்யா உணரச் செய்துள்ளது என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
அக்கருத்துகளை ஜி20 கூட்டறிக்கையில் சேர்த்திருக்காமல் இருந்திருந்தால் அது நமது தார்மீக நிலைப்பாட்டை வலுவிழக்கச் செய்வதாக அமைந்திருக்கும் என அவர் கூறினார்.
அனைத்துலக நிலைப்பாட்டிற்கு மாறுபட்டு ஐக்கிய நாட்டு சபையின் கோட்பாடுகளை மீறியுள்ள ரஷ்யாவிற்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நெருக்குதலை வலுவிழக்கச் செய்திருக்கும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
இந்தோனீசியாவின் பாலித் தீவில் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டின் முடிவில் நேற்று மாலை சிங்கப்பூர் செய்தியாளர்
களிடம் பிரதமர் பேசினார்.
"பிரச்சினைகள் சூழ்ந்த உலகம். நாளுக்கு நாள் நடக்கும் சம்பவங்களைக் கவனித்து அவை எப்படி நம்மை பாதிக்கின்றன என்பதை அறியவேண்டும்.
"தவறாகவும் சில அம்சங்கள் போகக்கூடும் என்பதால் சிங்கப்பூரர்கள் மனதளவில் தயாராக இருக்கவேண்டும். ஒன்றிணைந்து இருப்போம், ஒன்றிணைந்து பணியாற்றுவோம், ஒன்றுபட்டு இதிலிருந்து மீள்வோம்.
"உக்ரேன் போரால் பணவீக்கம், எரிசக்தி, உணவு விலை ஏற்றம் போன்ற பாதிப்பை நாம் உணர்கிறோம். நமது வட்டாரத்தில் பிரச்சினைகள் மூண்டாலோ அமெரிக்கா, சீனா இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அது நம்மை கண்டிப்பாக பாதிக்கும். முதலீடுகளின் வரத்தையும் வர்த்தக ரீதியில் பாதிக்கும்," என்று பிரதமர் கூறினார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சந்திப்பு நல்ல திசையை நோக்கியுள்ளதாகக் கூறிய பிரதமர் லீ, இருப்பினும் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது என்றார்.
"இருநாடுகளும் உறவுகளை நிலைப்படுத்தவும் சண்டையைத் தவிர்த்து தங்களுக்கு இடையிலான சில கடினமான பிரச்சினை களைக் களைய சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் அவை உணர்ந்துள்ளன. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்களில் ஒத்துழைப்பை புதுப்பிப்பது, கலந்துரையாடல்களை மீண்டும் தொடங்குவது போன்ற நல்ல விளைவுகள் ஏற்பட்டுள்ளன," என்றார் பிரதமர்.

