நாளை மறுதினம் நடக்க இருக்கும் 15வது மலேசிய பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்நாட்டில் சுமார் 2 மில்லியன் பேர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதன் காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து, ரயில் சேவைகளின் நுழைவுச் சீட்டு விற்பனை பலமடங்கு அதிகரித்துவிட்டது.
நாட்டின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இன்று முதல் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் காரணமாக பயணத்தில் தாமதம் நிகழலாம் என்றும் கூறப்
படுகிறது. சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல இருக்கின்றனர்.
இவர்கள் ஒருபுறமிருக்க, அஞ்சல் மூலம் வாக்களிக்கவும் ஏராளமானோர் பதிவு செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் 4,000 வாக்காளர்கள்
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 4,000 மலேசியர்கள் அவ்வாறு பதிவு செய்துள்ளனர். இங்கு பதிவாகும் வாக்குகளை மலேசியாவுக்குப் பத்திரமாக அனுப்பி வைக்க மலேசியர்கள் சிலர் தொண்டூழியம் புரிகின்றனர். அவர்களில் ஒருவரான ஃபாரா டியானா முகம்மது அலி, 34, என்னும் வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி மலேசியர்களின் வாக்குகளை அனுப்பி வைப்பதில் இரண்டாவது முறை சேவையாற்ற இருக்கிறார்.
இதற்கு முன்னர் ஜோகூர் மாநிலத் தேர்தலின்போது வாக்குப் பெட்டிகளைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்க தொண்டூழியம் புரிந்து உதவியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் அவர் கூறினார்.

