மலேசியாவின் 13 மாநிலங்களில் நான்காவது பெரிய மாநிலமான பேராக் இந்தப் பொதுத் தேர்தலில் மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது. எதிர்த்தரப்பு தலைவர் அன்வார் இப்ராகிம், அம்னோ தலைவர் அகமது ஸாஹித் ஹமிடி ஆகியோர் இந்த மாநிலத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் களமிறங்கி உள்ளனர்.
நாளை மறுதினம் வாக்களிப்பு நடைபெற இருக்கும் 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 24 தொகுதி கள் இந்த மாநிலத்தில் உள்ளன.
மலேசியாவின் ஆகப்பெரிய இந்தியர் கட்சியும் தேசிய முன்னணியின் முக்கிய கூட்டணிக் கட்சியுமான மலேசிய இந்தியர் காங்கிரசின் (மஇகா) முக்கிய தலைவர்களும் இந்த மாநிலத்தில் போட்டியிடுகின்றனர்.
மஇகா தலைவரான எஸ்ஏ விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் மஇகா தலைவரான சாமிவேலுவின் தொகுதியாகவும் மஇகாவின் கோட்டையாகவும் ஒரு காலத்தில் திகழ்ந்த சுங்கை சிப்புட் தற்போது எதிர்க்கட்சியின் ஆதிக்கத்தில் உள்ளது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பிகேஆர் கட்சியின் கேசவன் மீண்டும் களமிறங்கி விக்னேஸ்வரனை எதிர்க்கிறார். கடந்த தேர்தலில் மஇகாவின் எஸ்கே தவமணியை 5,607 வாக்குகள் வித்தியாசத்தில் கேசவன் தோற்கடித்தார். இம்
முறையும் அவருக்கே வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சாமிவேலுவுக்குப் பிறகு சுங்கை சிப்புட் தொகுதி எதிர்த்தரப்பு வசம் சென்றுவிட்டது. 2008ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் இத்தொகுதியில் மஇகா தோல்வியைத் தழுவியது.
72,452 வாக்காளர்கள் உள்ள இந்தத் தொகுதியில் இந்தியர்களின் விகிதம் 20 விழுக்காடு.
மஇகா துணைத் தலைவரான சரவணனும் இதே மாநிலத்தில் தாபா தொகுதியில் போட்டியிடுகிறார். 2018 தேர்தலில் மஇகா வென்ற ஒரே நாடாளுமன்றத் தொகுதி தாபா.
2008 முதல் இந்தத் தொகுதியில் மூன்று முறை வென்ற சரவணனை எதிர்த்து இம்முறை பக்கத்தான் ஹரப்பான், பெரிக்காத்தான் நேசனல் என்னும் இரு பெரிய எதிர்த்தரப்புக் கூட்டணியின் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளராக பிகேஆர் துணைத் தலைவர் சரஸ்வதி கந்தசாமி போட்டியிடுகிறார். கடந்த முறை வெறும் 614 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சரவணன், இம்முறை வெல்ல கடுமையாகப் போராடவேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
2008ஆம் ஆண்டுமுதல் பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட், செகாமாட், தெலுக் கேமாங், ஹுலு சிலாங்கூர் என்னும் நான்கு தொகுதிகளை பிகேஆர் வேட்பாளர்களிடம் மஇகா இழந்துள்ளது.
இம்முறை சுங்கை சிப்புட்டுடன் தாப்பாவும் பறிபோனால் அத்துடன் மஇகாவின் அரசியல் பயணம் முற்றுப்பெறும் என்று திருமதி சரஸ்வதி பிரசாரம் செய்தார்.

