கத்தாரில் உலகக் கிண்ணப் போட்டி காற்பந்து ஆட்டங்கள் நடைபெறவிருக்கும் எல்லா விளையாட்டரங்குகளிலும் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஒருவகை மதுபானத்தை விற்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது எதிர்பாரா விதமாக அந்த முடிவில் மாற்றம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டரங்குகளில் மதுபானம் விற்பதற்கென்று சில இடங்களை ஒதுக்கப்போவதாக கத்தார் அதிகாரிகள் முன்னதாக உறுதியளித்திருந்தனர். இனி அந்தப் பகுதிகள் விலக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தாரில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறுவதன் தொடர்பில் பல சர்ச்சைகள் இருந்து வந்துள்ளன. அந்நாட்டின் மனித உரிமை மீறல் செயல்கள், அங்குள்ள ஓரினக் காதலர் உரிமைகள் உள்ளிட்டவற்றின் தொடர்பில் மேற்கத்திய அணிகள் பல அதிருப்தி தெரிவித்துள்ளன.
சில அணிகள் வெளிப்படையாகக் கண்டனத்தைத் தெரிவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்து வந்துள்ளன.
கத்தாரின் பெரும்பாலான உணவகங்களில் மதுபானத் தடை நடப்பில் உள்ளது. உயர்தர ஹோட்டல்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய உணவகங்கள் இதற்கு விதிவிலக்கு.
கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் நடத்தும் ஒரு கிடங்கிலிருந்து மட்டும் வீட்டில் இருந்தபடி மது அருந்த வெளிநாட்டிலிருந்து வந்த கத்தார்வாழ் மக்கள் மதுபானம் வாங்கிக்கொள்ளலாம். அவ்வாறு செய்ய அவர்கள் தங்களின் முதலாளிகளிடமிருந்து அனுமதி பெற்றிருக்கவேண்டும்.
இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கத்தாரும் எக்குவடோரும் மோதுகின்றன.

