பிரதமர் லீ: தன்னிறைவு பெற்றிருப்பதாக எந்தப் பொருளியலும் கருதவில்லை
தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெறும் 'ஏபெக்' எனப்படும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்புக்கான உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் லீ சியன் லூங், தடையற்ற, வெளிப்படையான வர்த்தகம் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உலகின் எந்தப் பொருளியலும் முழுமையாகத் தன்னிறைவு அடைந்துவிட்டதாக நம்பிக்கைகொண்டிருக்கவில்லை என்பதை கொவிட்-19 கிருமிப் பரவல் உணர்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உலகப் பொருளியல் சூழலில் நிலையற்றதன்மை தொடரும் வேளையில் 'ஏபெக்' நாடுகள் நீடித்த நிலைத்தன்மையுடன்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்றுவது அவசியம் என்றார் திரு லீ.
'ஏபெக்' நாடுகளின் தலைவர்களுக்கான 29வது சந்திப்பில் அவர் உரையாற்றினார்.
புவிசார் அரசியல் பதற்றங்கள், பணவீக்கம், விநியோகச் சங்கிலியில் இடையூறு போன்றவற்றால் புதிதாக ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் குறிப்பிட்ட பிரதமர், இவற்றால் குறைந்த வருமானக் குடும்பங்களும் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என்றார்.
'ஏபெக்' விநியோகச் சங்கிலித் தொடர்புக் கட்டமைப்புத் திட்டத்தை சிங்கப்பூர் தொடர்ந்து வழிநடத்தும் என்று கூறிய அவர், 'ஏபெக்' நாடுகள் மீள்திறனையும் வெளிப்படையான விநியோகத்தையும் மேம்படுத்துவதில் இணைந்து செயலாற்றவேண்டும் என்று வலியுறுத்தினார்.
'ஏபெக்' அமைப்பில் 21 நாடுகள் பங்குபெறுகின்றன. உலகின் மொத்த வர்த்தகத்தில் இவற்றின் பங்கு 50 விழுக்காடு. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காடு இந்த நாடுகளைச் சேர்ந்தது.
"விநியோகச் சங்கிலி செயல்திறன், தொடர்பு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு ஆதரவு தரும் சூழலை உருவாக்கவும் இதில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் 21 நாடுகளும் கூட்டாகச் செயல்படுவது அவசியம். மேலும், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு போன்ற அம்சங்களில் சிறப்புற, தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றுவதும் முக்கியம்," என்று திரு லீ விளக்கினார்.
"கொவிட்-19 கிருமிப் பரவல் மின்னிலக்கமயமாதலை விரைவுபடுத்தினாலும் அனைத்துலகக் கட்டுப்பாடுகளால் பின்னடைவு ஏற்பட்டது," என்றார் அவர்.
"ஆஸ்திரேலியா, சிலி, தென்கொரியா, நியூசிலாந்து போன்ற 'ஏபெக்' நாடுகளுடன் சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது. மின்னிலக்கச் செயல்பாட்டால் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன் வர்த்தகச் செலவுகள் குறையும்," என்று பிரதமர் லீ கூறினார்.
பொருளியல் வளர்ச்சியால் அனைத்துத் தரப்பினரும் நன்மையடைவதை உறுதிசெய்யும் வகையில் சமூகங்களின் வளர்ச்சி சமநிலையுடன் அனைவரையும் உள்ளடக்கி இருத்தல் அவசியம் என்று திரு லீ வலியுறுத்தினார்.
இதுவரை 150,000க்கு மேலான வெளிநாட்டு அதிகாரிகளுடன் சிங்கப்பூர் அதன் மேம்பாட்டு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதைப் பிரதமர் சுட்டினார்.
கூட்டத்த்தைத் தொடங்கிவைத்துப் பேசிய தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான் ஓ சா, பருவநிலை மாற்றம் உலகிற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
அதன் தாக்கத்தைத் தணிக்க 'ஏபெக்' நாடுகள் கூட்டாக முயலவேண்டும் என வலியுறுத்திய அவர், அதில் கவனம் செலுத்தாமல் அவரவரின் தற்போதைய வேலைகளைத் தொடர்வது நல்லதல்ல என்றார்.

