கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நடைபெறும் விளையாட்டரங்குகளில் மதுபானத் தடை விதிக்கப்படுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவகை மதுபானத்தை விற்க அனுமதிக்கப்படும், விளையாட்டரங்குகளில் அதற்கு இடம் ஒதுக்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. எதிர்பாரா விதமாக அந்த முடிவில் மாற்றம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறுவதன் தொடர்பில் பல சர்ச்சைகள் நிலவுகின்றன. அந்நாட்டின் மனித உரிமை மீறல் செயல்கள், அங்குள்ள ஓரினக் காதலர் உரிமைகள் உள்ளிட்டவை தொடர்பில் மேற்கத்திய அணிகள் பல அதிருப்தி தெரிவித்துள்ளன.
கத்தாரின் பெரும்பாலான உணவகங்களில் மதுபானத் தடை நடப்பில் உள்ளது.
உயர்தர ஹோட்டல்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய உணவகங்கள் இதற்கு விதிவிலக்கு.
வெளிநாட்டினர் வீட்டில் இருந்தபடி மது அருந்த, முதலாளிகளின் அனுமதியோடு, கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனக் கிடங்கிலிருந்து மதுபானம் வாங்கிக்கொள்ளலாம்.
இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டி நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கத்தாரும் எக்குவடோரும் மோதுகின்றன.

