மலேசிய நாடாளுமன்றத்துக்கான 15ஆவது பொதுத் தேர்தலில் இன்று வாக்களிப்பு நாள்.
இதனையொட்டி, நேற்று இரவு 11.59 மணியுடன் பிரசாரங்கள் நிறைவுபெற்றுள்ளன. தேர்தல் பிரசாரம் இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கியது.
மலேசிய நாடாளுமன்றத்துக்கான 222 இடங்களுக்கும் பேராக், பாகாங், பெர்லிஸ், சாபா ஆகிய சட்டமன்றங்களுக்கான மொத்தம் 59 இடங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது.
மலேசியாவின் தேர்தல் சட்டத்தின்கீழ், கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்தல், நடத்துதல், அவற்றுக்கு ஏற்பாடு செய்தல், பொதுமக்களிடம் உரையாற்றுதல் உள்ளிட்டவற்றை நேற்று இரவு மணி 11.59க்குப் பிறகு மேற்கொள்வது குற்றமாகும்.
வாக்களிப்பு நாளில் அரசியல் காரணங்களுக்காக ஒலிபெருக்கிகளை விநியோகித்தல், வாக்குச் சாவடிகளுக்குள் கட்சி அலுவலகங்களை அமைத்தல் ஆகியவையும் குற்றமாகக் கருதப்படும்.
இம்முறை மலேசியாவின் பொதுத் தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 945 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.
முன்னதாக, வாக்களிப்பு நாள் வரை, வன்முறைச் சம்பவங்களோ சினமூட்டும் நடவடிக்கைகளோ அதிகமின்றி தேர்தல் பிரசாரம் நல்லமுறையில் இடம்பெறும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நம்பிக்கை தெரிவித்திருந்தார். நாட்டின் 15வது பொதுத் தேர்தல் தொடர்பில் அரசியல் உரையாற்றுவதற்கான மொத்தம் 2,148 அனுமதிகள் வழங்கப்பட்டதாக மலேசியக் காவல்துறை தெரிவித்தது.
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின், தேசிய முன்னணி தலைவர் ஸாஹிட் ஹமிடி, பக்கத்தான் ஹரப்பான் தரப்பின் அன்வார் இப்ராஹிம் ஆகியோர் இம்முறை மலேசியப் பிரதமர் பதவியைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ளனர்.
வலுவான அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்ட வேளையில் ஏறத்தாழ 108 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
நான்கு மில்லியனுக்கு அதிகமான இளையர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் இது ஐந்தில் ஒரு பகுதி எனக் கருதப்படுகிறது.
மலேசிய அரசியல்வாதிகள் அடிக்கடி கையிலெடுக்கும் இன, சமய அடிப்படையிலான பிரச்சினைகள் குறித்து இவர்களுக்கு அதிகம் கவலையில்லை. இளையர்களின் முன்னுரிமைகள் மாறுபட்டவை என்பதால் இவர்களின் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் பெரிய வித்தியாசத்திற்கு வித்திடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இளையர்கள் ஆதரவைப் பெறும் முயற்சியாக இம்முறை 'டிக்டாக்' உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புகழ்பெற்றவர்கள் வாயிலாகப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதை அவர்கள் சுட்டினர்.
இந்த முயற்சிகள் எல்லாம் ஒரு புறமிருக்க, வாக்களிப்பு நாளில் இயற்கை ஒத்துழைக்க வேண்டுமே என்ற கவலையும் நிலவுகிறது.
பராமரிப்பு அரசாங்கம் பருவமழைக் காலத்தில் தேர்தலை நடத்துவது குறித்துப் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் வாக்களிப்பு நாளான இன்று கனமழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
இன்றைய தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தாலும் பொருளியல் விவகாரங்களுக்கும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகளுக்கும் காலம் தாழ்த்தாமல் விரைவில் தீர்வுகாண வேண்டும் என்பதே மலேசியர்கள் அனைவரின் விருப்பம்.
ஏறத்தாழ 20 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கும் இன்றைய தேர்தலுக்கான ஏற்பாடுகள் சுமுகமான முறையில் மேற்கொள்ளப்படுவதாக நேற்றிரவு மலேசிய அதிகாரிகள் கூறினர்.
வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக பொதுப்போக்குவரத்தில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

