பல சவால்களையும் கடந்து மில்லியன்கணக்கான மலேசியர்கள் நேற்று பொதுத் தேர்தலில் வாக்களித்தனர்.
வெள்ளம்
மலேசியாவில் தற்போது பருவ
மழைக்காலம் என்பதால் சில இடங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தங்கள் ஜனநாயகக் கடமையை
எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்புடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்த சிலர் வாக்களிப்பு மையங்களுக்குச் சென்று வாக்களித்தனர். கிளந்தான் மாநிலத்தின் ரந்தாவ் பாஞ்சாங் தொகுதியில் நெஞ்சு அளவிலான வெள்ளத்தைக் கண்டு அஞ்சாமல் ஐந்து பேர் கொண்ட குடும்பம் படகில் சென்று வாக்களித்தனர். அவர்களில் முதல்முறையாக வாக்களித்த 18 வயது பெண்ணும் அவரது 70 வயது பாட்டியும் அடங்குவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தையும் அவர்களுடன் சென்று வாக்களித்தார்.
நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருப்பு
இது ஒருபுறம் இருக்க, வாக்களிப்பு மையங்களில் பல மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து பலர் வாக்களித்தனர். ஆனால் சில வாக்களிப்பு மையங்களில் வாக்களிக்காமலேயே சிலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
தலைநகர் கோலாலம்பூரில் உள்ள லெம்பா பந்தாயில் பல மணி நேரம் காத்திருந்தும் வாக்களிப்புப் பெட்டிகளை நெருங்க முடியாமல்போனதாக அத்தொகுதி மக்கள் சிலர் அதிருப்்தி தெரிவித்தனர். அவர்களுக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக மலேசிய ஊடகம் தெரிவித்தது. இறுதியில் வாக்களிக்கும் எண்ணத்தை அவர்களில் சிலர் கைவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நெகிரி செம்பிலானில் உள்ள கோலா பிலா தொகுதியில் இருந்த வாக்களிப்பு மையம் ஒன்றுக்கும் வாக்காளர்கள் நேற்று பிற்பகல் சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாக்களிப்பு மையம் மூடப்பட்டிருந்தது. விசாரித்துப் பார்த்ததில் அந்த மையம் பிற்பகல் 2 மணிக்கு மூடப்பட்டதாக தெரியவந்தது. இதனால் அவர்கள் சினம் அடைந்தனர். ஆனால் இதில் தேர்தல் ஆணையத்தின் தவறு ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சில வாக்களிப்பு மையங்கள் பிற்பகல் 2 மணி அல்லது 4 மணிக்கு மூடப்படும் என்றும் அதற்கு முன்னதாகவே அங்கு சென்று வாக்களிக்குமாறும் வாக்காளர்களுக்கு ஏற்கெனவே தெரிவித்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர். எனவே, வாக்களிக்க முடியாமல் போனதற்கு வாக்காளர்களின் கவனக்குறைவே காரணம் என்று அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, ஜோகூர் மாநிலத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு வாக்களிப்பு மையங்களில் பெண்கள் இருவர் மாண்டனர். 57 வயது பெண் ஒருவர் வாக்களித்து விட்டு வெளியே வந்தபோது மயங்கி கீழே விழுந்து மாண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
85 வயது மூதாட்டி ஒருவர், வாக்களிக்க வரிசையில் காத்துக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
வாக்களிக்க நோய் தடையல்ல
திரங்கானுவின் முன்னாள் முதல்வருடைய மனைவி நோய்வாய்ப்பட்டிருந்தும் ஆம்புலன்ஸில் இருந்தவாறு வாக்களித்தார். இதேபோன்று படுத்த படுக்கையாக இருக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரும் வாக்களித்தார்.