மலேசியாவில் அடுத்து யார் ஆட்சி, யார் பிரதமர்? தெளிவாக அடையாளம் காட்டாத பொதுத் தேர்தல்

3 mins read
3f03fbab-625c-4582-a28f-4e27f7ce05cb
கொண்டாட்ட உணர்வில் திளைக்கும் பெரிக்கத்தான் நேஷனல் ஆதரவாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியாவில் நடந்து முடிந்துள்ள 15வது பொதுத் தேர்தல், அந்நாட்டை அடுத்து வழிநடத்தப்போவது எந்த அரசியல் கட்சி அல்லது கூட்டணி என்பதை தெளிவாக அடையாளம் காட்டவில்லை. மாறாக, அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.

மலேசிய நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 222 தொகுதிகளில் இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. இதையடுத்து 220 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் மூலம் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ தனித்து ஆட்சியமைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனவே, தொங்கு நாடாளுமன்றம்தான் என்ற முடிவுக்கு வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் படலம் உடனுக்குடன் தொடங்கி உள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.50 மணி நிலவரப்படி, 220 தொகுதிகளில் 215 தொகுதிகளுக்கான நிலவரங்கள் சற்றேறக்குறைய தெரிந்துவிட்டன. அந்த வகையில் பக்கத்தான் ஹரப்பான் 78 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

எனவே, மீதமுள்ள தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றிபெற்றாலும் குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இயலாது. ஏனெனில் அதற்கு 111 இடங்கள் தேவைப்படும்.

தேசிய முன்னணிக் கூட்டணியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தது இந்தக் கூட்டணிதான். ஆனால் இம்முறை இக்கூட்டணியால் 35 தொகுதிகளில்கூட வெல்ல முடியுமா என்பதே சந்தேகமாக உள்ளது. நேற்று பின்னிரவு நிலவரப்படி 30 தொகுதிகளில் மட்டுமே இது முன்னிலை வகித்தது.

சரவாக் மாநிலத்தில் உள்ள ஜிபிஎஸ் கூட்டணி 22 இடங்களில் முன்னிலை வகிக்க, வாரிசான் இரு தொகுதிகளிலும் முன்னணி வகித்தது. கேடிஎம் ஒரு தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றிமுகமாக உள்ள நிலையில், அடுத்து அமைய உள்ள அரசாங்கத்தில் சாபா, சரவாக் மாநிலங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதன் பலனாக அம்மாநிலங்களின் சார்பில் இரு துணைப் பிரதமர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கைகூடலாம்.

இதற்கிடையே தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்குப் பின்னர், உறுதியான அரசாங்கம் அமைவதை உறுதிசெய்யும் வகையில் தேசிய முன்னணி கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி அரசில் பங்கேற்கத் தயார் என அக்கூட்டணியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

"நடந்து முடிந்துள்ள தேர்தல் மூலம் அம்னோவுக்கு தெளிவாக சமிஞ்சை கிடைத்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான அரசாங்கம் தேவை என்பதை உணர்ந்து, அதையொட்டிய கடப்பாடுடன் செயல்பட்டு வருகிறது தேசிய முன்னணி. எனவே கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைக்க நாங்கள் தயார்," என்றார் ஸாஹிட்.

பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் கூட்டணி பெரிதாக சாதிக்காது என்று கூறப்பட்ட நிலையில், அம்னோவைப் புறந்தள்ளிவிட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது அந்தக் கூட்டணி. எனவே புது அரசாங்கத்தில் இடம்பெறும் பட்சத்தில் பெரிக்கத்தான் அதிக நிபந்தனைகளை முன்வைக்கக்கூடும்.

பக்கத்தான் ஹரப்பான் என்ன முடிவெடுக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

விடுமுறை நாள் என்றபோதிலும் அரசியல் கட்சிகளுக்கு விடுமுறை இல்லை

இன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள் என்றபோதிலும் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அக்கட்சிகளுக்கு விடுமுறை இல்லை.

அம்னோ தலைவர்கள் இன்று ஒன்றுகூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதேபோல் பெரிக்கத்தான் அணி தலைவர்களும் வேறு இடத்தில் கலந்தாலோசித்து முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் பொதுத் தேர்தல் முடிவுகள் டாக்டர் மகாதீர் முகம்மது, ரசாலி ஹம்ஸா, முக்ரிஸ் மகாதீர், இடைக்கால சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் என முக்கியத் தலைவர்கள் பலரின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

அனைத்து முடிவுகளும் முழுமையாக அறிவிக்கப்பட்டு, அடுத்த இரு தினங்களுக்குள் அரசியல் கட்சிகளும் கூட்டணித் தலைவர்களும் எடுக்கப்போகும் முடிவுகள்தான் மலேசியாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லும்.