மலேசியப் பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்று. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு நேற்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து,
வாக்குச் சீட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.
மொத்தம் உள்ள 222
நாடாளுமன்றத் தொகுதிகளில் குறைந்தது 112 தொகுதிகளைக் கைப்பற்றும் கூட்டணி, அரசாங்கத்தை அமைக்க தகுதி பெறும்.
இதுவரை இல்லாத கடும் போட்டி
இந்நிலையில், மலேசியாவில் இதற்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்களைவிட இவ்வாண்டு தேர்தலில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய முன்னணி, பக்கத்தான் ஹரப்பான், பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய மூன்று பெரிய கூட்டணிகளும் பல்வேறு சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.
முதல் முடிவு
வாக்களிப்பு முடிந்து சில மணி நேரத்திலேயே சரவாக் மாநிலத்தில் இகான் தொகுதிக்கான முடிவு களை மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தத் தொகுதியை கபுங்கான் சரவாக் கட்சி கைப்பற்றியது.
இதற்கிடையே, நேற்று இரவு 9 மணி அளவில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளரும் சிலாங்கூரின் தற்போதைய முதல்வருமான அமீருதீன் ஷாரி கிட்டத்தட்ட 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொம்பாக் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அஸ்மின் அலிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. நேற்றிரவு 11 மணி நிலவரப்படி ஜோகூர் மாநிலத்தின் ஆயர் ஹித்தாம் தொகுதியை தேசிய முன்னணி வேட்பாளரும் மலேசிய சீனர் சங்கத்தின் தலைவருமான டாக்டர் வீ கா சியோங் தக்கவைத்துக்கொண்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின.
அத்தொகுதியில் அவர் இம்முறையும் வென்றதால் அங்கு ஐந்தாவது முறையாக வெற்றி அடைந்த பெருமை அவரைச் சேரும்.
அன்வார் இப்ராஹிம் முன்னிலை
நேற்று இரவு 11 மணி நில
வரப்படி பேராக்கின் தம்புன் தொகுதியில் போட்டியிடும்
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனலின் அகமது ஃபைசால் அசுமு போட்டியிடுகிறார்.
முன்னாள் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது, லங்காவியில் தோல்வியைத் தழுவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
சுங்கை புலோவில் தேசிய முன்னணியின் கைரி ஜமாலுதீனுக்குப் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாக்களிப்பு ஒத்திவைப்பு
பாடாங் சிராய், தியோமான், பராம் ஆகிய தொகுதிகளில் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நேற்று 219 தொகுதி களில் மட்டுமே வாக்களிப்பு நடைபெற்றது.
வெள்ளம் மோசமடைந்ததால் சரவாக்கில் உள்ள பராம் தொகுதியில் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பாடாங் சிராய், தியோமான் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர் மரணம் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று இரவு 11 மணி நிலவரப்படி தேசிய முன்னணிக்கும் பக்கத்தான் ஹரப்பானுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

