மலேசியத் தேர்தலில் நீயா-நானா: இன்று பிற்பகல் 2 மணிக்குள் பிரதமரை அறிவிக்க மாமன்னர் கெடு
மலேசியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின், தனக்குப் போதிய ஆதரவு இருப்பதாக நேற்று அறிவித்தார்.
நாட்டின் 10வது பிரதமராக பதவி ஏற்க தான் ஆயத்தமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், அடுத்த அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மை ஆதரவு இன்னமும் தனக்கே இருப்பதாக பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் நேற்று உறுதிபட கூறினார்.
இதன் தொடர்பிலான சட்டப்பூர்வ பிரகடனம் மாமன்னரிடம் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமக்கு அடுத்த பிரதமர் வாய்ப்பு வழக்கப்படும் என்று உறுதியாக தான் நம்பி இருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.
முன்னதாக, சாபா, சரவாக் மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கும் முக்கியமான இரண்டு போர்னியோ கூட்டணிகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக நேற்று திரு முகைதீன் அறிவித்தார்.
ஜிபிஎஸ், ஜிஆர்எஸ் என்ற அந்த இரண்டு கூட்டணிகளுக்கும் மொத்தம் 28 இடங்கள் கிடைத்து இருக்கின்றன.
முகைதீனின் பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணி 73 இடங்களைப் பிடித்து இருக்கிறது.
ஜிபிஎஸ், ஜிஆர்எஸ் தலைவர்கள் நேற்று முகைதீனைச் சந்தித்துப் பேசினார்கள். தம்மை பிரதமராக பெயர் குறிப்பிட ஜிபிஎஸ், ஜிஆர்எஸ் கூட்டணிகள் இணங்கி இருப்பதாக நேற்று மாலை அறிக்கை ஒன்றில் முகைதீன் கூறினார்.
புதிய அரசில் பாரிசான் நேஷனல் சம்பந்தப்பட்டு இருக்குமா என்பது தெரியவில்லை. பிஎன் கூட்டணிக்கு பாரிசான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த குறைந்தபட்சம் 11 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டி இருக்கிறது.
அப்படிப் பெற்றால்தான் 222 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பிஎன் அணிக்குப் பெரும்பான்மை கிடைக்கும்.
முன்னதாக பிஎன் கூட்டணி அரசில் அங்கம் வகிக்க தான் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அந்தப் புதிய அணியில் பாரிசான் நேஷனலும் சேர்ந்து இருக்கும் என்றும் ஜிபிஎஸ் அணித் தலைவர் அபாங் ஜொஹாரி சரவாக்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் பிஎன் கூட்டணியோடு சேர்ந்து மத்திய அரசை அமைப்பதன் தொடர்பில் ஜிபிஎஸ் அணியுடன் பாரிசான் நேஷனல் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துவிட்டார்.
மலேசியாவில் நடந்து முடிந்த 15வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்), பக்கத்தான் ஹரப்பான் (பிஎச்), பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) ஆகிய மூன்று முக்கிய கூட்டணிகள் களம் கண்டன.
அன்வார் தலைமையிலான பிஎச் அணிக்கு மொத்தம் 82 இடங்கள் கிடைத்தன. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான பிஎன் அணிக்கு ஆதரவாக 79 இடங்கள் கிடைத்தன.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அன்வார்-முகைதீன் இருவரும் பிரதமர் பதவிக்குக் குறிவைத்து காய்களை நகர்த்தத் தொடங்கினர்.
சரவாக் மாநிலத்தில் உள்ள 31 இடங்களில் 22 இடங்களைப் பிடித்துள்ள ஜிபிஎஸ் என்ற கட்சியின் தலைவரும் அந்த மாநில முதல்வருமான அபாங் ெஜாஹாரி, நேற்று கோலாலம்பூர் விரைந்து முகைதீனைச் சந்தித்தார்.
அதோடு, நாடாளுமன்றத்தில் ஆகப் பெரிய தனிக் கட்சியாகத் திகழும் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்கையும் அவர் சந்தித்தார்.
அன்வார், ஜிபிஎஸ் கட்சியுடன் பேச்சு நடத்த நேற்று காலை நேரத்திலேயே முயற்சிகளை முடுக்கிவிட்டார்.
ஆனால் அவரை விடுத்து திரு முகைதீனைச் சந்திக்க ஜிபிஎஸ் தலைவர் எடுத்த முடிவு அன்வாருக்குப் பெரும் பின்னடைவாகி விட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
இவ்வேளையில், கூடியவிரைவில் பெரும்பான்மை அரசை அமைக்கும்படி வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அரண்மனை கடிதங்களை எழுதி இருப்பதாகத் தெரியவந்தது.
"எல்லா கட்சிகளும் அரசு அமைப்பதற்கான தங்கள் அணிகளை அறிவிக்க வேண்டும்.
"நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மெய்ப்பிக்கக்கூடிய உறுப்பினரின் பெயரை திங்கட்கிழமை (இன்று) பிற்பகல் 2 மணிக்குள் தெரியப்படுத்திவிட வேண்டும் என்று மாமன்னர் உத்தரவிட்டு இருக்கிறார்," என நேற்றுப் பிற்பகலில் அரண்மனை தெரிவித்தது.

