பிடிஓ வீடு: மேலும் முன்னுரிமை பரிசீலனை

பிடிஓ வீடு: மேலும் முன்னுரிமை பரிசீலனை

2 mins read

பிடிஓ வீட்டை ஒதுக்குவதில் அவசரமாக வீடு தேவைப்படுவோருக்கு மேலும் முன்னுரிமை வழங்குவது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

முதன்முதலாக வீடு வாங்குவோரில் அவசரத் தேவை உள்ள பிரிவினர் இவர்களில் அடங்குவர் என்று அவர் கூறினார். சிங்கப்பூரர்களின் வீட்டுத் தேவை பற்றி வேலை பார்க்கும் இளம் வயதினரான ஏறக்குறைய 70 பேருடன் கூடிய கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதோடு, கால ஓட்டத்திற்கு ஏற்ப முதிர்ச்சி பெற்ற பேட்டைகள், முதிர்ச்சி பெறாதவை என்று நகர்களை வகைப்படுத்தும் நடைமுறையும் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று திரு லீ கூறினார்.

அரசாங்க வீடுகளுக்குப் போட்டி அதிகம். விண்ணப்பங்கள் குவிகின்றன. இதனால் தாக்குப் பிடிக்கக்கூடிய விலையில் வீடு கிடைக்குமா என்ற கவலை எழுந்துள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இந்த ஆண்டில் பிடிஓ வீடுகள் கிடைப்பதை வேகப்படுத்தி இருப்பதாகக் கூறினார்.

வீடுகளுக்குத் தேவை அதிகமாகவே இருக்கும்பட்சத்தில் 2025ஆம் ஆண்டுவரை அதிக வீடுகள் விற்பனைக்குக் கொடுக்கப்படும்.

முதல் முறையாக வீடு வாங்கு வோருக்கு முன்னுரிமை கொடுப்பப்பட வேண்டும் என்று கலந்துரையாடல்களில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர்.

முதல்முறை வீடு வாங்குவோரில் வீடு அவசரமாகத் தேவைப்படுவோர், உடனடியாகத் தேவைப்படுவோர் என்று பல வகையினர் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இளம் வயதினருக்கு அரசாங்க வீடுகள் தொடர்ந்து எட்டக்கூடியதாக இருந்து வருமா என்பது பற்றி கருத்து கூறிய அமைச்சர், முதல்முறை வீடு வாங்குவோருக்காக கணிசமான பிடிஓ வீடுகள் ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்தார். வீடுகளைப் பெறுவதில் வெற்றிபெற விரும்பும் தம்பதியர் முதிர்ச்சியடையாத பேட்டையில் அல்லது விண்ணப்பங்கள் குறைவாக இருக்கக்கூடிய திட்டங்களில் வீடுகளுக்கு மனு செய்வது பற்றி பரிசீலிப்பார்கள் என தான் நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பொது வீடமைப்பு பற்றிய ஆறு கலந்துரையாடல்களைக் கொண்ட தொடரில் கடைசி நிகழ்ச்சி நேற்று நடந்தது. அவற்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், யோசனைகள் மிகவும் பயன் உள்ளதாக இருந்துள்ளன என்றும் அவற்றை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.