மலேசிய மாமன்னருக்கு ஆதரவுக் கடிதங்களை அனுப்பினார் முகைதீன்

2 mins read
915b129f-c1cb-4f3d-b055-baa40ba47802
மலேசிய தேர்தலின்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திரு முகைதீன் யாசின். படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

மலேசியாவின் 10வது பிரதமராக திரு முகைதீன் யாசினை தேர்வு செய்ய பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவுக் கடிதங்களாக பிரமாண பத்திரங்களை மாமன்னருக்கு தான் அனுப்பி வைத்துள்ளதாக பெரிக்கத்தான் நேஷனல் கூறியுள்ளது.

கூட்டணிக் கட்சிகள் ஆட்சியமைக்க மலேசிய மாமன்னர் விதித்திருந்த திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி காலக்கெடுவிற்கு முன்னதாகவே ஆதரவுக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

தேசிய முன்னணிக் கூட்டணியின் கோரிக்கையை ஏற்று காலக்கெடுவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மாமன்னர் நீட்டித்திருந்தார். மலேசியப் பிரதமர் பதவிக்கு பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராகிமை ஆதரிப்பதா என்பது தொடர்பில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் தேசிய முன்னணி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

"அனுப்பப்பட்ட ஆதரவுக் கடிதங்களின் எண்ணிக்கை 112ஐ தாண்டியது. பிரதமராக ஒருவரை நியமிக்க தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுவே," என்று பெரிக்கத்தான் நேஷனல் தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின் கூறினார்.

திரு அன்வாருக்கும் தேசிய முன்னணி தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடிக்கும் இடையே திங்கள்கிழமை காலை நடந்த கடைசி நேர சந்திப்பு எந்தவோர் உடன்பாடுமின்றி முடிவுற்றது.

யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி தமது கூட்டணியின் உச்ச மன்றம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஸாஹிட் கூறினார்.

பிற்பகல் 2 மணிக்கு கெடு முடிவடைவதற்கு சில மணி நேரமே இருந்த நிலையில், திரு அன்வாரும் ஸாஹிட்டும் சந்தித்துப் பேசினர்.

"ஆட்சியமைக்க விரும்பும் கட்சிகளைப் பேச்சுவார்த்தைக் குழு சந்தித்து, பேச்சுவார்த்தையிலிருந்து கருத்து கிடைத்த பிறகே தேசிய முன்னணி உச்ச மன்றம் எந்தவொரு முடிவையும் எடுக்கும்," என்று அம்னோ தலைவரான ஸாஹிட் கூறினார்.

பெரிக்கத்தான் நேஷனலுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் தேசிய முன்னணி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் ஸாஹிட் கூறினார்.